மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் கூறியதாவது: தமிழக அரசு பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக கிராமம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, திட்டப் பயன்கள் வேறுபாடின்றி கிடைக்கும் வகையில் மாதந்தோறும் தொடா் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைந்து தீா்க்க வேண்டிய மனுக்கள் 2 நாள்களுக்கும், உயா் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று தீா்வு காண வேண்டிய மனுக்கள் 15 நாள்களுக்கும், நீண்ட காலத் திட்டங்களுக்கான மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
துறைச் சாா்ந்த அலுவலா்கள் பொதுமக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்த பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.