பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட வாரியாகக் குழு: தமிழ்நாடு தனி...
இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? கேம் சேஞ்சர் திரை விமர்சனம்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கிறது?
முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர், இந்தப் படத்தில் கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரம்மாண்ட இயக்குநருக்கு, குறி ஒருமுறைதான் தப்பும் என ரசிகர்கள் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதிர்ச்சியே காத்திருந்தது.
கதையின் களம் எனப் பார்த்தால், எதிலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஹீரோவைக் காதலி கட்டுப்படுத்துகிறார். கோவத்தை சரியான முறையில் காட்ட அவனை ஐபிஎஸ் படிக்கச் சொல்கிறார். அவரும் படித்து அதிகாரி ஆகியவுடன் சமூகத்தின் மீதான, ஊழல்வாதிகள் மீதான தனது கோவத்தை எப்படி காண்பிக்கிறார் என்றே கதை துவங்குகிறது. பின்னர் அவருக்கும் ஊழலில் ஊறிப்போன, பதவி ஆசை தலைக்கேறிய அமைச்சரான எஸ்.ஜே. சூர்யாவுக்கு இடையேயான ஹீரோயிக் அரசியல் சண்டையாக கதை விரிகிறது.
பல படங்களில் பார்த்ததுபோலவே, புதிதாக பதவி ஏற்கும் ஹீரோ ஐபிஎஸ்-ன் நேர்மை தாண்டவத்தை ரவுடிகளால் மட்டுமல்ல.. நம்மாலும் தாங்க முடிவதில்லை. அரிசி குடோனில் எலியை காணவில்லை என்பதால் இரசாயனக் கலப்பைக் கண்டுபிடிப்பது, விதிகளை மீறி கட்டப்பட்ட மால் (Mall) ஒன்றை 30 நொடிகளில் ஊர் மக்கள் முன்னிலையில் தரை மட்டமாக்குவது என பிரம்மாண்டம் என்ற பெயரில் பெரிய சலிப்பை மட்டுமே கொடுத்துள்ளார் இயக்குனர். படம் முழுவதும் இதே கதிதான். காட்சிகளில் பிரம்மாண்டத்திற்கு குறை இல்லை என்றாலும் திரைக்கதையில் குறைகளுக்கும் குறையில்லை.
முக்கியமாக ஹீரோ அறிமுகக் காட்சியில், நீங்கள் தீவிர ராம் சரண் ரசிகனாக இருந்தாலும் உச்சுக்கொட்ட வைக்கமளவில்தான் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எல்லா சண்டைக்காட்சிகளுமே அளவுக்கு மீறிய ஹீரோயிசத்தோடும், இரைச்சலாகத் தெரியும் இசையோடும் தேவையில்லாத மோக்கோபாட் காட்சிகளாலும் நிரம்பி வழிகின்றன. ஹெலிகாப்டரில் புட் போர்டு அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம், மீம் கிரியேட்டர்களை HD பிரிண்ட்டுக்காக காத்திருக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பார்வையாளர்களை படத்தோடு ஒன்ற வைக்கும் ஒரு காட்சிகூட படத்தில் இடம்பெறாதது மிகப்பெரிய பலவீனம் எனச் சொல்லலாம். எந்தவித ரசனையையும் ஏற்படுத்திடாத காதல் கதையும், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திடாத பிளாஷ் பேக்கும் பார்வையாளர்களை விரட்ட நினைப்பதாகவே தோன்றுகிறது. இந்தகால பார்வையாளர்களுக்காக இந்த படத்தில் சில விஷியங்களைப் புகுத்தியிருப்பதாக இயக்குநர் சொல்லும் நிலையில், முக்கால்வாசி காட்சிகள் "கிரிஞ்"" எனும் இந்த காலச் சொல்லுக்குள் அடங்கிவிடுகின்றன.
படத்தில் நகைச்சுவைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவையெல்லாம் நகைச்சுவைதானா? என்பதில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. சுனில், பிரம்மானந்தம், ஜெயராம் போன்ற பிரபலங்களை எல்லாம் மிகக் கொடூரமாக வீணடித்துவிட்டது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் சுனிலின் நகைச்சுவைக் கதாப்பாத்திரம் உச்சகட்ட சோகம். போடும் ஜோக்கிற்கு யாரும் சிரிக்காமல் இருக்கும் சோகத்தைவிட பெரும் துயர் இந்த உலகில் இல்லை என்ற கருத்து உண்டு. அந்தப் பெரும் துயர் இந்த படம் முழுவதும் இருப்பதை நினைத்து பல பார்வையாளர்கள் வருந்தியதைப் பார்க்க முடிந்தது. அதற்கு டப்பிங் காரணமா இல்லை நகைச்சுவைதான் காரணமா என்பது குழப்பம்தான்.
கல்லூரி பிளாஷ் பேக்கில் வரும் காதல் காட்சிகள் யாரையும் சிரிக்க வைக்கவும் இல்லை, அந்தக் காதலை ரசிக்க வைக்கவும் இல்லை. அடிக்கடி நேரத்தை மட்டுமே பார்க்க வைத்தது.
எஸ்.ஜே சூரியாவை வில்லனாகப் பார்த்துப் பார்த்து ஏற்கனவே சலிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருடைய கதாப்பாத்திரமும் பலமாக அமையாதது, இனி படங்களை அவர் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையே அழுத்தமாகச் சொல்லுகின்றன. அஞ்சலியின் எதிர்பாராத தோற்றம் புதுமை. தேவையான நடிப்பையும் வழங்கியுள்ளார்.
அரசியல் மேடைகளில் நடக்கும் வாக்குவாதங்களும், அமைச்சராக வரும் எஸ்.ஜே. சூரியாவின் நாகரீகமற்ற மேடை நடவடிக்கைகளும், ஊகிக்கக் கூடிய இடைவேளைக் காட்சியும், ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், ஏன் தலைவரும் கூட பொதுவெளியில் ஒரு அதிகாரியை (ஹீரோ) அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் அடிப்படையிலேயே தவறாக இருப்பதை படக்குழுவில் யாருமே உணரவில்லையா என்பது வருத்தமளிக்கிறது.
இறுதியாக படத்தில் இயக்குநராக சங்கர் வெற்றியைக் கண்டதில் எந்தவித சந்தேகமில்லை. மேக்கிங்கில் அவருடைய "டச்"கள் படத்தில் பல இடங்களில் தெரியாமில்லை. பாடல்களின் பிரம்மாண்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளன. ஆனால் இந்தியன் 2-விலும் சரி, கேம் சேஞ்சரிலும் சரி கதை, திரைக்கதை எனப் பார்க்கும்போது அங்குதான் பிரச்னை கொட்டிக்கிடக்கிறது..
கார்த்திக் சுப்புராஜின் கதைக் கரு உண்மையில் நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் அந்தக் கருவிற்கு பூசப்பட்டுள்ள பல சாயங்கள் இந்தப் படத்தின் வெற்றியை தட்டிவிட்டிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
இயக்குநர் சங்கர் இந்தகால பார்வையாளர்களுக்கென படம் எடுப்பதாகச் சொல்கிறார். உண்மையில் அவரது பழைய படங்களைத்தான் இந்தகால ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால் டிரெண்டை நோக்கி ஓடாமல் அவருடைய பாணியில் படங்களை எடுத்தாலே தமிழ் சினிமாவில் சங்கர் தனது பழைய இடத்தைப் பிடித்துவிடுவார்.