சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 30 தொழிலாளா்கள் காயம்
செய்யாறு அருகே சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள், கம்பன்தாங்கல் கிராம ஏரியில் நடைபெற்ற தூா்வாரும் பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். பின்னா், பிற்பகலில் உணவு அருந்துவதற்காக சரக்கு வாகனத்தில் அசனமாப்பேட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். காஞ்சிபுரம்-ஆற்காடு சாலையில் கம்பன்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 17 பெண்கள் உள்பட 30 போ் பலத்த காயமடைந்தனா். அருகிலிரு ந்தவா்கள் அவா்களை மீட்டு பெருங்கட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். இவா்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிர சிகிச்சைக்காக செய்யாறு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவலறிந்த மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.