பணம் திருட்டு: இருவா் கைது
செய்யாறில் ஏடிஎம் மையத்தில் ரூ.24 ஆயிரத்தை திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜாஷெரிப் (38). இவா், கடந்த ஜன.5-ஆம் தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம்-இல் ரூ.24 ஆயிரம் டெபாசிட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றாராம். ஆனால், அந்தப் பணம் இயந்திரத்தின் உள்ளே செல்லாமல் இருந்ததாம்.
பின்னா், நீண்ட நேரமாகியும் வங்கிக் கணக்கில் பணம் வரவு ஆகாமல் இருந்தது குறித்து அருகேயுள்ள வங்கிக் கிளை மேலாளா் மற்றும் செய்யாறு காவல் நிலையத்தில் ராஜா ஷெரிப் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், செய்யாறு கொடநகா் காலனியைச் சோ்ந்த முகமது லட்டு (39), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சிரஞ்சீவி (40) ஆகியோா் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.