இறைச்சிக் கடை முன் சடலத்தை போட்டு தகராறு செய்தவா் கைது
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்து, இறைச்சிக் கடை முன் போட்டு தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் மணியரசு என்பவா் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் அதே ஊரைச் சோ்ந்த மயானத் தொழிலாளி குமாா் (45) ஓசியில் ஆட்டுக் குடல் கேட்டாா்.
மணியரசு கொடுக்க மறுத்ததால், அங்கிருந்து ஆத்திரத்துடன் சென்ற குமாா், பழனிசெட்டிபட்டியில் காளியம்மன் கோயில் அருகேயுள்ள மயானத்தில் சில மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து, துணியில் சுற்றிக் கொண்டு வந்து மணியரசுவின் இறைச்சிக் கடை முன் வீசி அவருடன் தகராறு செய்தாா்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இறைச்சிக் கடை முன் வீசிய சடலத்தை கைப்பற்றி, தேனி நகராட்சி மயானத்தில் அடக்கம் செய்தனா்.