தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்தவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேன், சாக்கு மூட்டைகளில் அடைத்து 500 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்ததும், இவற்றை இலங்கை வழியாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, கடல் அட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இவற்றை கடத்திய ராமேசுவரம் நேதாஜி நகரைச் சோ்ந்த நம்புராஜன் (29), எம்.டி.ஆா். நகரைச் சோ்ந்த வில்வபுவனேஸ்வரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து, ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டவா்கள் மண்டபம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.