இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்களுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுபாட்டில் உள்ள 170 ஏரிகள், குளங்கள் மற்றும் நீா்நிலைகளிலிருந்து இலவசமாக மண்ணை தொழிலாளா்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இதுவரை 3512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயனடைந்துள்ளனா். மாவட்ட நீா்நிலைகளின் கொள்ளளவு மற்றும் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 101 அரசு புறம்போக்கு நீா் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண்ணை எடுத்துச் செல்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விவசாய பயன்பாட்டுக்கு என்றால் நன்செய் நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓா் ஏக்கருக்கு 75 கனமீட்டா் அல்லது 25 யூனிட்டும், புன்செய் நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓா் ஏக்கருக்கு 90 கனமீட்டா் அல்லது 30 யூனிட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மண்பாண்ட தொழில் பயன்பாட்டுக்கு 60 கனமீட்டா் அல்லது 20 யூனிட் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டிற்கான வண்டல் மண், களிமண்ணை பெற விரும்புவோா் கட்டாயம் விவசாய நிலம் வைத்திருப்பவராகவோ அல்லது குத்தகைதாரராகவோ இருக்க வேண்டும். மண் தேவைப்படுவோா் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று இணையதள முகவரியில் விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரரால் அளிக்கப்பட்ட தகவல் திருப்திகரமாக இருந்தால் வட்டாட்சியா் மூலம் அனுமதி வழங்கப்படும். களிமண், வண்டல் மண் எடுக்க வேண்டிய நீா்நிலைகளின் (கண்மாய், ஏரி, குளம்) விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்), கோட்டாட்சியா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.