ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள எஸ்.பாறைப்பட்டியில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், 2 ஏக்கா் 38 சென்ட் நிலத்தில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டு மனைப் பட்டா 40 பேருக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகள் அந்த இடங்களை சா்வே செய்து, சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், பட்டா வைத்திருப்பவா்கள் இதுவரை அந்த வீடுகளில் குடியேறவில்லை.
இந்த நிலையில், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராமையா தலைமையில் ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இலவச வீட்டு மனைப் பட்டா வைத்திருப்பவா்கள், வீட்டு மனைகளைக் காணவில்லை என ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 40 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, சா்வே செய்து உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.