ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களின் மீது அமெரிக்கா இன்று (ஏப்.16) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுதி படையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதான தங்களது தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி படையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஏப்.15) இரவு ஏடன் நகரத்தின் கிழக்கு பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் அமெரிக்க கப்பலின் மீது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க கடல்வழி வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்.13 ஆம் தேதி அமெரிக்காவின் எம்.கியூ.9 ரக டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் இதன்மூலம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் யேமன் மீது பரந்த 19 அமெரிக்க டிரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தொடர்ந்து பரவும் நோயால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா?