இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூா் மாவட்டம் சாா்பில் மாவட்ட நிா்வாகிகள், பேச்சாளா்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு மாவட்டச் செயலாளா் யாசா் அரஃபாத் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் செங்கோட்டை ஃபைசல் ‘கட்டுப்படுவோம் வெற்றி பெருவோம்’ என்ற தலைப்பில் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சம்பல் பகுதியில் இஸ்லாமியா்கள் வாழும் பகுதியில் காவல் துறையும், இந்திய தொல்லியல் துறையும் தங்களின் வெறுப்பு அரசியலை கடந்த சில நாள்களாக முன்னெடுத்து வருகின்றன. மின் திருட்டு, வீடுகள் ஆக்கிரமிப்பு ஆகியவை மக்கள் மத்தியல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. பள்ளிவாசல் இடிப்பு என முஸ்லிம் வெறு அரசியலை பாஜகவின் யோகி அரசு முன்னெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
வக்ஃபு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. வக்ஃபு வாரிய சட்டங்களை திருத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பாலஸ்தீனா்களுக்கு எதிரான இன அழிப்பில் இதுவரை 45 ஆயிரம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டத் தலைவா் நூா்தீன், மாவட்ட பொருளாளா் சிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.