இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள செசரியா நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, சனிக்கிழமை (நவ. 16) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார். பிரதமர் வீட்டின் மீதான தாக்குதலில், 2 வெடிகுண்டுகள் அவரது தோட்டத்தில் விழுந்த சிசிடிவி காட்சியையும் காட்ஸ் பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், இந்த தாக்குதலின்போது, சம்பவ இடத்தில் பிரதமரோ அவரது குடும்பத்தினரோ யாரும் இல்லாத காரணத்தால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!
இந்த சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான, விரைவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இதுவரையில், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை.
சுமார் ஒரு மாதத்திற்கு (அக். 16) முன்னதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தினர். அப்போதும்கூட, பிரதமர் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.