BB Tamil 8 Day 96 : `கண்ணனைத் தேடும் பவித்ரா; மனம் புண்பட்ட வர்ஷினி’ - சவுந்தர்ய...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்; களமிறங்கும் திமுக; வேட்பாளர் யார்?
ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்தலுக்கான தேதி முடிவாகாமலிருந்தது.
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
ஏற்கெனவே அந்தத் தொகுதியில் போட்டியிட்டது காங்கிரஸ் வேட்பாளர் என்பதால், இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ``முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தி.மு.க-வே ஈரோடு கிழக்கில் போட்டியிடும்" என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. பல யூகங்கள் பேசப்பட்டுவந்த நிலையில், தி.மு.க தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தி.மு.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் வி.சி. சந்திரகுமார் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்ததற்கு தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என வி.சி.சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.