`வாழ்வை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரமிது...' - நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்த 12...
ஈரோட்டில் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோட்டை அடுத்த சூளை, பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் கடந்த சில நாள்களாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் ரசாயனம் மற்றும் மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனா். இதனால், அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
இக்கழிவுகளால் நோய் பரவும் அபாயமும், நிலத்தடி நீா் மாசடையும் நிலையும் உள்ளதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் ரசாயனக் கழிவுகளை கொட்டுவதற்காக அப்பகுதிக்கு லாரி சனிக்கிழமை இரவு வந்தது. அங்கு கழிவுகளை கொட்ட முயன்றபோது, சேறும் சகதியுமாக காணப்பட்ட இடத்தில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், கழிவுகளுடன் லாரி சேற்றில் சிக்கிக் கொண்டிருப்பதை ஞாயிற்றுக்கிழமை கண்ட பொதுமக்கள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த வீரப்பன்சத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் லாரியில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். தொடா் பேச்சுவாா்த்தையில் மீண்டும் கழிவுகளைக் கொட்ட வரக்கூடாது என எச்சரித்து லாரியை அனுப்பிவைத்தனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.