கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நி...
BB Tamil 8 Day 56: `பவித்ராவை கார்னர் செய்த விசே; அம்பலப்பட்ட இருட்டுக்கடை திருட்டு பிரியாணி'
‘மிட்நைட் பிரியாணி’ என்றொரு சமாச்சாரம் பல்வேறு இடங்களில் இருப்பது தெரியும். ஆனால் அதன் ‘மெயின் பிராஞ்ச்’ பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது அதிர்ச்சிகரமான தகவல். இது முந்தைய வாரங்களில் நடந்த விஷயமாக இருந்தாலும் ‘i swear on my profession. நாங்க எதையும் ஒளிச்சு வெச்சு திங்கலை’ என்று அத்தனை சென்டிமென்ட்டாக அருணால் எப்படி சொல்ல முடிந்தது? கிச்சன் இன்சார்ஜாக அத்தனை கெடுபிடியாக எப்படி அவரால் நடந்து கொள்ள முடிந்தது?
சனிக்கிழமை எபிசோடை விடவும் ஞாயிறு எபிசோடு சற்று சுமாராக இருந்தது. காந்தி ராட்டினத்தை வைத்துக் கொண்டே சுதந்திரப் போராட்டத்தை நடத்தியது போல், பொம்மையை தைக்கும் அஹிம்சைப் போராட்டத்தின் வழியே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் விஜய்சேதுபதி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 56
கையில் பொம்மையுடன் அரங்கில் நுழைந்த விசே “தனிமனித தாக்குதல் தப்புதானே? வாங்க நியாயத்தைக் கேட்போம்” என்றபடி உள்ளே சென்றார். ஒருவர் நன்றாக விளையாடினால் ‘பிச்சிட்டீங்க.. போங்க’ எனலாம். ஆனால் இவர்களோ பொம்மையை பிச்சு பிச்சு விளையாடியிருக்காங்க’ என்று விசே சொல்லியிருக்கலாம். “வாங்க ரவுடி செல்லங்களைப் பார்க்கலாம்” என்று அவர் சேர்த்துக் கொண்டது நல்ல குறும்பு.
“நீங்க என்னை சுத்த விட்டீங்கன்னா.. நான் பாட்டுக்கு பொம்மையை தைக்க ஆரம்பிச்சிடுவேன்.. ஓகேவா?” என்று அஹிம்சை முறையில் போட்டியாளர்களிடம் டீல் பேசினார் விசே. போட்டியாளர்களின் வாயை அடைத்தால்தான் பிரச்சினையாகிறது. அதற்குப் பதிலாக பொம்மையின் வாயை அடைத்தால் பிரச்சினை ஆகாது என்று நினைத்து விட்டார் போல.
“பொம்மை டாஸ்க்ன்னு ஒண்ணு விளையாடினீங்கள்ல.. அதை என்ன நெனச்சு விளையாடினீங்க?.. பவித்ரா நீங்க சொல்லுங்க” என்று ஆரம்பத்திலேயே சிறப்பாக தூண்டிலை வீசினார் விசே. ஆனால் அந்த மீன் சிக்கவில்லை. “மத்தவங்களைக் காப்பாத்தறது சார்” என்று பவித்ரா சொல்ல “குட்.. உக்காருங்க. ராணவ்.. எழுந்திருங்க.. வேணாம். உக்காருங்க. உங்க கிட்டயும் ரயான் கிட்டயும் பேசணுமான்னு இருக்கு” என்று அவர்களை வறுத்தெடுக்கப் போவதற்கான வார்ம்-அப் எச்சரிக்கையை முன்வைத்தார்.
பவித்ராவை கார்னர் செய்த விசே
“யார்.. யார். எந்த டீமா இருந்தீங்க?” என்று விசே விசாரிக்க ‘ஆதரவற்றோர் குழு’ சார்பில் எழுந்த முத்து “நானு.. தீபக்.. ராணவ்.. மஞ்சரி, ஆனந்தி சாச்சனாலாம் ஒரு டீமா இருந்தோம்” என்றார். அடுத்து எழுந்தவர் சத்யா. இவர்களின் குழு ‘தானா சேர்ந்த கூட்டமாம். “டீம்லாம் பிளான் பண்ணலை சார். அதுவா அமைஞ்சது. விஷால், அன்ஷிதா. சிவா, தர்ஷிகா, அருண்லாம் இருந்தோம்” என்றார் சத்யா. “இப்படியொரு டீம்ல இருக்கோம்ன்னு எங்களுக்கே தெரியாது” என்று காமெடி செய்தார் விஷால். “நாங்க பாட்டுக்கு ஓடிப் போய் பொம்மையை வெள்ளந்தியா வெச்சுட்டோம். ஒரு பொம்மையை ஹோல்ட் பண்ணி வைக்கலாம்ன்னு கூட எங்களுக்குத் தெரியாமப் போச்சு” என்று அப்பாவித்தனமாக விஷால் சொல்ல “ஓஹோ.. அப்படியா கதை.. நம்பிட்டேன்’ என்கிற மாதிரி பார்த்தார் விசே.
“எனக்கு ரூல்ஸ் படிக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. என் பொம்மை உள்ளே போகவேயில்ல. பார்த்தேன். சவுந்தர்யா பொம்மையை எடுத்து வெச்சிக்கிட்டேன்..” என்று பொம்மையை தக்க வைத்த சீனியர் கேட்டகிரியில் பெருமையாகச் சொன்னார் தர்ஷிகா.
“பொம்மையை ஹோல்ட் பண்ணலாம்ன்னு விஷாலுக்கு முன்னாடியே தெரியும் சார்.. என் பொம்மையை வெச்சிக்கிட்டு ஆட்டம் காட்டினான். கத்திப் பார்த்தேன். கதறிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன்..” என்று முத்து போட்டுக் கொடுக்க அப்போதும் ‘எனக்குத் தெரியாது’ என்று விஷால் சாதிக்க “வெளில வந்தவுடனே பிக் பாஸ்ல விளையாடறது எப்படின்னு புக் எழுதுங்க. வருங்கால சந்ததிகள் இதைப் படிச்சு கத்துப்பாங்க” என்று விஷாலை நக்கலடித்தார் விசே.
அடுத்தது ‘கோவா கேங்க்ஸ்’. இதில் ஜாக்குலின், ரயான், சவுந்தர்யா, ஜெப்ரி ஆகியோர் இருந்தார்கள். “என்னை இதில சேர்க்காதீங்கடா” என்று ஆட்சேபித்த ரஞ்சித் “நாங்க மத்தவங்களால கை விடப்பட்டவங்க சார். பவித்ராவும் நானும் ஒருத்தொருத்தருக்கு ஒருவர் துணையா விளையாடினோம்” என்று அப்பாவித்தனமாக சொன்னார். “அப்படில்லாம் இல்லை சார்..பவித்ரா பல டீம்ல இருந்தாங்க” என்று மஞ்சரி போட்டுத் தந்தார்.
“நீங்களா ஒத்துக்கிட்டா நல்லது” - இம்சித்த விசே - அழ ஆரம்பித்த பவித்ரா
‘பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரியும் இந்த நபர்தான் ஐந்து பொம்மைகளை போட்டுத் தள்ளியுள்ளார்’ என்பது மாதிரி பார்த்த விசே “உங்க ஸ்ட்ராட்டஜியை பாராட்ட விரும்பறேன்.. நல்லா ஸ்கெட்ச் போட்டிருக்கீங்க” என்று சர்காஸம் செய்ய “சார்.. ஸ்கெட்ச் பேனா மட்டும்தான் எனக்குத் தெரியும். நானா எதையும் பிளான் பண்ணலை. இது தானா நடந்த விஷயம்” என்று மறுத்தார். ஆனால் பவித்ரா மறுக்க மறுக்க அதை விசே வலியுறுத்திக் கொண்டே இருந்ததை சும்மா கற்பனைக்காக இப்படிப் பார்க்கலாம்.
விசே: “மிஸ். பவித்ரா… குற்றவாளி நீங்கதான்னு நாங்க கண்டுபிடிச்சிட்டோம். இதுக்காக எங்க டீம் பல ஆதாரங்களை சேகரிச்சு வெச்சிருக்கு. ஒழுங்கா ஒத்துக்கங்க.. நீங்கதானே குற்றம் செஞ்சீங்க?”
பவித்ரா: “இன்ஸ்பெக்டர் சார்… ஸாரி.. விஜய்சேதுபதி சார்.. நான் எதுவும் செய்யலை சார். நான் நிரபராதி.. எல்லாமே அப்படி அமைஞ்சிடுச்சு. சூழ்நிலையின் கைதி நான். நிஜமான கைதி இல்ல”
விசே: ‘இதோ.. பாருங்கம்மா.. நீங்களா ஒப்புத்துக்கிட்டா.. தண்டனையோட அளவு குறையும். சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம்.. நாங்களா ப்ரூவ் பண்ண வேண்டியிருந்தா.. விளைவுகள் கடுமையா இருக்கும். ஒழுங்கா ஒத்துக்கங்க”
பவித்ரா: (மைண்ட் வாய்ஸில்: ‘கடவுளே. அஜித்தே.. இவருக்கு எப்படித்தான் புரிய வைக்கறதோ?!) சாமி சத்தியமா அப்படி கிடையாது சார்.. நான் எதையும் பிளான் பண்ணவேயில்லை.
விசே: “ஏம்மா.. யாருமே கண்டுபிடிக்க முடியாத மாதிரி திறமையா குற்றம் பண்ணியிருக்கீங்க.. அதை நான் பாராட்ட விரும்பறேன். அது கூடவா உங்களுக்குத் புரியல.. குத்தத்தை ஒத்துக்கங்க.. நான் பாராட்டறேன்”
பவித்ரா: “சார்.. நம்புங்க.. சார்.. நான் நிரபராதி சார். .. (அழுகையின் ஆரம்பம்)
விசே: “ஏம்மா.. இவ்ள நேரம் கெஞ்சறனே.. அதுக்காகவாவது ஒத்துக்கக்கூடாதா.. என்னவொரு கல் மனசு.. சரி.. உக்காருங்க”
ஒரு சபையில் பவித்ரா இத்தனை நேரம் மறுக்கிறார் என்றால் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து விட்டு விடுவதுதான் முறையானது. தான் பிளான் செய்து ஆடியிருந்தால் ஒருவகையில் பவித்ராவிற்கு அது கிரெடிட்தான். விசே இத்தனை அழுத்தமாக வற்புறுத்தியது நெருடல். ஆனால் மஞ்சரியும் ஆனந்தியும் ‘எங்களுக்கு டவுட்தான்’ என்கிற மாதிரி சாட்சியம் அளித்தார்கள். உண்மையை விளக்கமாகச் சொன்னால் இந்த மனுஷன் கோபித்துக் கொள்வாரோ என்று அவர்களுக்குத் தயக்கம் போல.
அன்ஷிதாவின் மழுப்பல் - பொம்மையை தைக்க ஆரம்பித்த விசே
போட்டியாளர்கள் மென்று முழுங்க ஆரம்பித்தால் கையில் பொம்மையை எடுத்துக் கொண்டு தைக்க ஆரம்பித்த விசேவின் ஸ்ட்ராட்டஜி நன்று. அடுத்ததாக ஜாக்குலின் - அன்ஷிதா - மஞ்சரி டிரையாங்கிள் டிராமாவைப் பாராட்டினார் விசே. கொடுத்த வாக்கிற்காக விடாப்பிடியாக நின்ற ஜாக்கின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய விசே “ஏம்மா.. கேம் முடிஞ்சப்புறமும் ஏன் ஜாக் மேல கோபம்.. முதல்ல இருந்தே அப்படி இருந்தா கூட ஓகே..” என்று அன்ஷிதாவைக் கேட்டார். வழக்கமாக அன்ஷிதா வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று தத்தக்கா பித்தக்கா மொழியில் சொல்லி விடுவார். ஆனால் அவரும் இந்த முறை ‘தீபக் பொம்மையை வைக்கத்தான் பார்த்தேன்” என்று மழுப்ப விசே தைப்பதற்கு பொம்மையை எடுத்துக் கொள்ள கூட்டம் வெடித்து சிரித்தது.
சம்பந்தப்பட்ட கட்டுரையிலேயே இதைச் சொல்லியிருந்தோம். தீபக் பொம்மையைக் காப்பாற்றுவது அனஷிதாவின் மெயின் டார்கெட்டாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவருக்கு ஜாக் மற்றும் மஞ்சரியின் மீது கோபம். அதைத்தான் அம்பலப்படுத்த விசே விரும்பினார் போல. அது நடக்கவில்லை. எனவே ‘சரி.. உக்காருங்க…’ என்று சலித்துக் கொண்டார். இந்த மாதிரி சமயங்களில் விசேவின் சலிப்பில் நியாயம் இருக்கிறது.
“ஆக்சுவலி.. நான் உங்களையெல்லாம் பாராட்ட விரும்பறேன். அது உங்களுக்குப் புரியலையா.. ஏன் கூட்டுக்குள்ள போய் உக்காந்துக்கறீங்க..” என்ற விசே “அஞ்சு நாள் வீடியோவை 1 நாள் ஆடியோவா கேக்கற மாதிரி ஃபீல் வருது” என்று சொன்ன பன்ச் வசனம் நன்று. “நான் சொல்றது உனக்காவது புரியுதா?” என்று பொம்மையிடம் பேசிய காட்சியும் சுவாரசியம்.
“நீ அந்த அளவிற்கெல்லாம் வொர்த் இல்ல” என்று பிரேக்கில் பவித்ராவை கிண்டலடித்தார் தர்ஷிகா. “பாரேன்.. என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்கிறாரு’ என்கிற மாதிரி உட்கார்ந்திருந்தார் பவித்ரா. விசேவின் தலையீட்டிற்குப் பிறகு ஜாக்கும் அன்ஷியும் கட்டியணைத்து பிரெண்ட்ஸ் ஆனார்கள்.
‘அனகோண்டா மாதிரி இறுக்கிட்டான்’ - ராணவ் மீது குற்றம் சாட்டிய ஜெப்ரி
பிரேக் முடிந்து திரும்பி வந்த விசே, ரயான் - ராணவ் சண்டையை விசாரிக்க ஆரம்பித்தார். “பொம்மை மேலதான் என் ஃபோகஸ் இருந்தது. பள்ளத்துக்குள்ள விழுந்ததே எனக்குத் தெரியாது” என்று சாதித்தார் ராணவ். “அனகோண்டா மாதிரி இறுக்கிட்டான்.. என்னால மூச்சே விட முடியல. மயக்கமே வர மாதிரி ஆயிடுச்சு” என்று கதறினார் ஜெப்ரி. “நான் அத்தனை டைட்டா பிடிச்சிருந்தா, ஜெப்ரியால முட்டியை வெச்சு என்னை அடிச்சிருக்கவே முடியாது” என்று லாஜிக்காக சொல்லி எஸ்கேப் ஆக முயன்றார் ராணவ். “அது வெளில நடந்த விஷயம்” என்றார் ஜெப்ரி.
இதெல்லாம் கூட ஆட்ட மும்முரத்தில் நடந்த விஷயங்கள். ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு ராணவ்வை ரயான் அடிக்கப் பாய்ந்ததுதான் சீரியஸான விஷயம். “என்னன்னு கேட்கப் போனேன்” என்று ரயான் ஆரம்பிக்க, சர்காஸ்டிக்காக கைதட்டினார் விசே. போட்டியாளர்கள் சொதப்புவது இது போன்ற நேரங்களில்தான். ராயன் அடிக்கப் பாய்ந்தது ஊருக்கே தெரிந்த விஷயம். என்றாலும் ‘விசாரிக்கப் போனேன்’ என்று டிஃபென்ஸிவ்வாக ஆரம்பிப்பது மோசமான உத்தி. “ஆமாம்.. அந்த நேரத்து எமோஷன்ல ஆயிடுச்சு. தப்புத்தான்” என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
“இனிமேல் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக்கூடாது. கவனமா விளையாடுங்க. இது தொடர்ந்தா விளைவுகள் வேற மாதிரி இருக்கும்” என்று பொதுவாக எச்சரித்த விசே, ரயான் கிடுக்கிப்பிடியைப் போட்டாலும் அதை ஸ்போாட்டிவ்வாக எடுத்துக் கொண்ட மஞ்சரியைப் பாராட்டினார். “தீபக்கைப் பாருங்க.. என்ன கோபம் வந்தாலும் வார்த்தை தவறலை’ என்று ராணவ்விற்கு சுட்டிக் காட்டினார். ஜாக்கிடம் ராணவ் விட்ட கெட்ட வார்த்தை தொடர்பான எச்சரிக்கை இது. இதுவரை விசேவிடம் திட்டு வாங்காத ஒரே நபர் தீபக் மட்டும்தான் போல.
விசே பிரேக்கில் சென்ற சமயத்தில் “சண்டை போட்டது கூட ஓகே.. ஆனா லேடீஸ் கிட்ட கெட்ட வார்த்தை பேசிட்டேன்..அதான்” என்று மனம் வருந்தினார் ராணவ். அவர் பிறகு ஜாக்குலினிடம் தனியாகப் பேசி மன்னிப்பு கேட்டாரா?
இத்துடன் பொம்மை டாஸ்க் பற்றிய விசாரணை முடிந்தது. ஆனால் இறுதிக் கட்டத்தில் ஜெப்ரியின் பொம்மையை உள்ளே வைத்து சிவாவை டீலில் விட்ட அருணின் தடுமாற்றம் உள்ளிட்ட சில விஷயங்கள் விவாதிக்கப்படவில்லை.
‘விசே ரொம்ப கஷ்டப்படறாராம்’ - பேசிக் கொண்ட ஊர் மக்கள்
விசே பிரேக் முடிந்து திரும்பிய போது பார்வையாளர் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து “நீங்க பேச விடறதில்லைன்னு வெளில பேசிக்கறாங்க.. ஆனா நேரா வந்து பார்த்தாதான் நீங்க படற கஷ்டம் புரியுது.. அதே போல சாச்சனா கிட்ட நீங்க ஃபேவர் காட்டறீங்கன்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் கிடையாது” என்று விசேவிற்கு ஆதரவாக பேச ‘நன்றிம்மா’ என்றார் விசே. பார்வையாளர் தரப்பு உண்மையென்றால், வார இறுதி எபிசோடுகள் சுவாரசியமற்றுப் போவதற்கு நிச்சயம் பிக் பாஸ் டீமின் திறமையற்ற இயக்கம் மற்றும் எடிட்டிங்தான் காரணம் என்று தோன்றுகிறது.
உள்ளே சென்ற விசே ‘இருட்டுக்கடை திருட்டு பிரியாணி’ குழுவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மெயின் எபிசோடை மட்டும் பார்ப்பவர்களுக்கு இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது லைவ் எபிசோடில் காட்டப்பட்டது. மட்டுமல்லாமல், இது இந்த வாரத்தில் நடந்த விஷயமில்லை. கடந்த வாரங்களில் நடந்த விஷயம். (எனில் அப்போதே ஏன் அது விசாரிக்கப்படவில்லை?!)
“எதுவா இருந்தாலும் எங்களைக் கேட்டுத்தான் செய்யணும்” என்று அலப்பறை செய்த கிச்சன் இன்சார்ஜ் அருணும் திருட்டு பிரியாணி கூட்டத்தில் இருந்தார். உணவு சம்பந்தப்பட்டது என்றாலே அதில் சாச்சனாவின் பெயரும் இருக்கும் என்று எளதில் எதிர்பார்க்கலாம். “உணவு விஷயத்தில் எல்லோரையும் சமமாத்தான் பார்ப்பேன்” என்று சொல்கிற அன்ஷிதாவிற்கும் குற்றத்தில் பங்கிருந்தது. சத்யா, விஷால், ரயான் ஆகியோரும் இந்த இருட்டுக்கடை குற்றத்தில் கூட்டாளிகளாக இருந்தனர். குற்றத்தின் எல்லை வரைக்கும் சென்று மனச்சாட்சி உறுத்தியதால் தீபக் அப்ரூவர் ஆனார். ஆனால் “இப்படியெல்லாம் பண்ணியிருக்கீங்களா.. அரிசியை காணோம்ன்னு நான் தேடிட்டு இருந்தேன்.. நீங்க போய் தூங்குங்க சீனியர்ன்னு சொன்னாங்க சார்” என்று தீபக் முதலில் பாவனை செய்தது நல்ல ஆக்டிங்.
அம்பலப்பட்ட இருட்டுக்கடை திருட்டு பிரியாணி
“இவர்கள்தான் அந்த உத்தமர்கள்” என்று விசே சொல்ல அருண் வெட்கத்துடன் திரும்பிக் கொண்டார். ஒரு ரொட்டி வறுத்த விஷயத்தை உலகப் போர் அளவிற்கு டீல் செய்த அருணும் மற்றவர்களும் சிரித்துக் கொண்டே தங்களின் குற்றத்தை சொன்னது அவமானகரமான விஷயம். ஒரு சின்ன விஷயத்தைக் கூட நீளமாக இழுக்கும் விசே, இதை போகிற போக்கில் டீலில் விட்டதும் ஏற்க முடியாதது.
“நீங்க கேளுங்க சவுந்தர்யா” என்று அவரை விசே தூண்டி விட “நானும் இனிமே திருடப் போறேன்” என்று அந்தப் பெண்ணும் தத்துப் பித்தென்று உளறினார். இதற்கு கைத்தட்ட வேறு ஒரு கூட்டம். “பாயாசம் சாப்பிட்டது யாரு தெரியுமா? என்று விசே ஆரம்பிக்க “கடைசி வரை தெரியலை சார்” என்று சவுந்தர்யா அனத்த, கடைசி வரைக்கும் நமக்கும் கூட அந்த உண்மை காட்டப்படாமல் போய் விட்டது.
இதையெல்லாம் குறும்படமாகப் போட்டு எபிசோடை சுவாரசியப்படுத்தலாம். ஆனால் கோர்ட் விசாரணை போல்தான் நடத்துவோம் என்று பிக் பாஸ் டீம் வீம்பாக நிற்பது அவர்களுக்குத்தான் இழப்பு.
மற்றவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் நான்கு பேர் மீதமிருந்தார்கள். சிவா, சாச்சனா, ஆனந்தி மற்றும் ரஞ்சித். “யாரு போவாங்கன்னு நெனக்கறீங்க..?” என்கிற டெம்ப்ளேட் கேள்வியை நீண்ட காலம் கழித்து கேட்டார் விசே. “நான்தான்னு நெனக்கறேன்” என்று சாச்சனா சொல்ல ஆமோதிப்பது போல் பார்வையாளர்களின் கைத்தட்டல் கேட்டது. இதிலாவது தனது எச்சரிக்கை மணியை சாச்சனா உணரலாம். “நான்தான்” என்று ரஞ்சித்தும் சொன்னார். ஆனால் ‘சிவாவா இருக்கும்” என்று ஆனந்தியும் சாச்சனாவும் சரியாக யூகித்தார்கள். பொம்மை டாஸ்க்கின் வழியாகவே எவிக்ஷனை அறிவித்தார் பிக் பாஸ்.
கிளம்புவதற்கு முன்னால் தன் தனிப்பட்ட வாழ்க்கையை சிவா பகிர்ந்து கொண்டது நெகிழ்வாக இருந்தது. சிவாஜி கணேசன் வீட்டின் வாரிசு என்கிற பெருமையான அடையாளம் இருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு வாரிசாகப் பிறப்பது ஒருவகையான துயரம். சிவாஜியின் மூத்தமகனான ராம்குமார், நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரியான மீனாட்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவர்தான் சிவக்குமார். “அப்பாவோட அன்பு தெரியாது. அம்மாதான் வளர்த்தாங்க. கிட்னி ஃபெயிலர்னால அவங்க கஷ்டப்பட்டாங்க “சுஜாவை நல்லாப் பார்த்துக்க”ன்னு சொல்லிட்டுப் போனாங்க. சுஜாதான் எனக்கு எல்லாமே. இன்னிக்கு நான் பெருமையான தந்தையா நிக்கறதுக்கு என் மனைவி சுஜாதான் காரணம்” என்று சிவா உருக்கமாகப் பேச அனைவரும் நெகிழ்ந்தார்கள்.
கேப்டன் ஆன ஜெப்ரி
மேடைக்குச் சென்ற சிவா, ‘உள்ளே இருக்கற எல்லோருமே ஸ்வீட்டான ஆளுங்க. தீபக் மேல எனக்கு முதல்ல கோபம், விரோதம் இருந்தது. அப்புறம்தான் அவரோட நல்ல குணத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். ‘பாய்ஸ்’ படத்துல மங்கலம் சார் மாதிரிதான் ரஞ்சித் சார். பொய் இல்லாத மனுஷன். அருண் என்னோட பெஸ்ட் நண்பன்” என்றெல்லாம் இனிமையான வார்த்தைகளைச் சொல்லி விட்டு விடைபெற்றது சிறப்பான காட்சி.
ஜெப்ரியையும் சாச்சனாவையும் வாழ்த்திய விசே “கேப்டன் போட்டியை ரொம்பவும் எதிர்பார்க்கறேன்” என்று சூசமாகச் சொல்லி விட்டுச் சென்றது ஜெப்ரிக்கான குறிப்பாக இருக்கலாம். “நீ கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்கணும்னு அவசியமில்ல. நிறைய பேர் உன்னை அப்படி பார்க்க ஆசைப்படுவாங்க..” என்று ஜெப்ரிக்கு சவுந்தர்யா தந்த அட்வைஸ் சிறப்பானது. அவசியமான நேரத்தில் தந்ததும் கூட. “குழப்பமா இருக்கு” என்று தவித்த ஜெப்ரி பிறகு “ஓகே.. கேப்டன் ஆகறேன்” என்று சொன்னது நல்ல விஷயம்.
லேட்டஸ்ட் தகவலின் படி வீட்டின் கேப்டனாக ஜெப்ரி வெற்றி பெற்றிருக்கிறார். பி.டி.மாஸ்டராக கலக்கியவரின் தலைமை எப்படியிருக்கிறது என்று இந்த வாரம் தெரிந்து விடும். ஆனால் சாச்சனா கேப்டன் ஆகியிருந்தால் நிறைய ரகளையான ஃபுட்டேஜ்கள் கிடைத்திருக்கும். அப்படி தானே..!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...