கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நி...
World Chess Championship: 'ஒரு மூவ்க்கு 42 நிமிடங்கள் யோசித்த லிரன்!'- 6வது சுற்று எப்படி டிரா ஆனது?
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆறாவது சுற்று ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்த சுற்றும் டிராவிலேயே முடிந்திருக்கிறது. இதன் மூலம் குகேஷ், டிங் லிரன் இருவருமே தலா 3 புள்ளிகளோடு சமநிலையில் இருக்கின்றனர். ஆறாவது சுற்றின் முக்கியமான தருணங்கள் இங்கே.
6-வது சுற்றில் வெள்ளை காய்களைக் கொண்டு டிங் லிரனும், கருப்புக் காய்களைக் கொண்டு குகேஷும் விளையாடினார்கள். இதில் டிங் தனது சிப்பாயை d4-க்கு நகர்த்தி குயின்ஸ் சிப்பாய் ஓப்பனிங் மூலம் ஆட்டத்தைத் தொடங்கினார். அதற்கு குகேஷ் தனது குதிரையை f6-க்கு நகர்த்தினார்.
இந்தச் சுற்றை டிங் லிரன் லண்டன் சிஸ்டம் ஓப்பனிங் மூலம் கொண்டுச் சென்றார். டிங் வெள்ளை காய்களைக் கொண்டு விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெவ்வேறு ஓப்பனிங்கை ஆடினார். முதல் சுற்றில் e4-ம், இரண்டாவது சுற்றில் Nf3-ம், இப்போது d4-ம் ஆடியுள்ளார்.
இந்தச் சுற்றில் இருவரும் ஓப்பனிங்கில் நன்கு தயாராக வந்தனர். இருவரும் வேகமாக முதல் 16 மூவ்களை விளையாடினார்கள். 17-வது மூவிற்கு குகேஷ் 16 நிமிடங்கள் யோசிக்கத் தொடங்கினார். ஆனால், டிங் தொடர்ந்து வேகமாகவே விளையாடி வந்தார்.
ஆட்டத்தின் 42-வது மூவில் தான் டிங் லிரன் 42 நிமிடங்கள் யோசித்து தனது இராணியால் c6-ல் இருந்த சிப்பாயை வெட்டினார். ஆட்டம் தொடங்கி 2 மணிநேரத்தில் டிங் ரிப்பிடேஷன் முறை மூலம் ஆட்டத்தை டிரா செய்ய முன்வந்தார். ஆனால், குகேஷ் அதற்கு ஒத்துப்போகவில்லை.
இருவரும் சிறப்பாக விளையாட ஆட்டம் தொடங்கி 4 மணிநேரம் கழித்து 46-வது மூவில் ரிப்பிடேஷன் மூலம் டிரா செய்தனர். ரிப்பிடேஷன் என்றால் ஒரே மூவை தொடர்ந்து இருவரும் மூன்று முறை ஆடி டிரா செய்து கொள்வார்கள்.
இன்று ஓய்வு தினம். அதையடுத்து நடக்கும் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெள்ளை காய்களும், கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் கருப்புக் காய்களும் கொண்டு விளையாடுவார்கள்.