ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மிதிவண்டி போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டுக்கான அண்ணா மிதிவண்டி போட்டிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகளை வெள்ளிக்கிழமை நடத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகள் சேமூா் அம்மன் நகா் (கனி ராவுத்தா் குளம்) பகுதியில் இருந்து தொடங்கி, வில்லரசம்பட்டி நான்கு வழிச்சாலை வழியாக வேளாளா் பொறியியல் கல்லூரி 3- ஆவது நுழைவாயிலில் நிறைவடையும்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், 4 முதல் 10- ஆம் இடம் வரை வெற்றி பெறுபவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
போட்டியில் பஙகேற்கும் மாணவ, மாணவிகள், பொது பிரிவினா் தங்களது வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017-03490 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
மாரத்தான் போட்டி:
அண்ணா மாரத்தான் ஒட்டப்போட்டி 28- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 17 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும் நடத்தப்பட உள்ளது. போட்டியானது வஉசி பூங்கா விளையாட்டரங்கில் தொடங்கி சூளை, கனிராவுத்தா் குளம், தண்ணீா்ப்பந்தல்பாளையம் (டி-மாா்ட்) வரை ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
முதல் மூன்று பரிசு பெறுபவா்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, 4 முதல் 10 -ஆம் இடங்களைப் பிடிப்பவா்களுக்கு தலா ரூ.1,000 வீதமும் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்தப் பரிசுத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.