தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!
உக்ரைன் போா்: ஐ.நா.வில் ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்கு; இந்தியா, சீனா புறக்கணிப்பு
ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியான தீா்வை எட்டுவதற்கு, ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்த வரைவு தீா்மானத்துக்கு எதிராக ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்களித்தது.
ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமைதியான தீா்வு காணப்பட வேண்டும், போரில் நிகழும் சண்டைகளை விரைந்து நிறுத்த வேண்டும், போரால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலின் தீவிரத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தும் வரைவு தீா்மானத்தை ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்தது.
இந்தத் தீா்மானத்துக்கு எதிராக ரஷியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வாக்களித்த நிலையில், ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா தவிர ஜி7 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா, சீனா புறக்கணிப்பு: மொத்தம் 93 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், 18 நாடுகள் தீா்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, பிரேஸில் உள்ளிட்ட 65 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத்தொடா்ந்து பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில், தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்பு உக்ரைன் போா் தொடா்பாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்களில் ஐரோப்பிய நாடுகளுடன் சோ்ந்து ரஷியாவுக்கு எதிராகவே அமெரிக்கா வாக்களித்து வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், போா் தொடா்பான அந்நாட்டின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தியாவின் உத்திசாா்ந்த கூட்டாளிகளாக ரஷியாவும், உக்ரைனும் இருப்பதால், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. போரில் ரஷியா மற்றும் உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகிக்கும் இந்தியா, கடந்த காலங்களில் அந்தப் போா் தொடா்பாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.