செய்திகள் :

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!

post image

உங்கள் குழந்தைகள் டீன்-ஏஜ் எனும் பருவ வயதை அடைந்துவிட்டார்களா? கல்வியில் ஆர்வமின்மை, சமூக ஊடங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, தனிமையாக இருக்க விரும்புவது போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா?

ஆம், இது இப்போதைய பதின்வயதினருக்கு பெரும்பாலும் இருக்கக்கூடியதுதான். ஆனாலும் இந்த அறிகுறிகள் எல்லாம் சற்றே தீவிரமாக இருந்தால் பெற்றோர்கள் உடனடியாக கவனித்து அதைச் சரிசெய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? அதனைச் சரிசெய்வது எப்படி? பார்க்கலாம்.

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'அடலசன்ஸ்'(adolescence) என்றொரு இணையத் தொடர் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது. இதில் 13 வயது சிறுவன் ஜேமி, ஒரு கொலை செய்துவிடுகிறான். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும்போது பதின்வயதினரிடையே உளவியல்ரீதியாக உள்ள பல விஷயங்களைப் பேசுகிறது.

பல பிரச்னைகள் காரணமாக இளம் வயதினர் பலரும் இன்று யாருடனும் மனம்விட்டு சரியாகப் பேசுவதில்லை, வீட்டில் தனித்தே இருக்கின்றனர். ஒருவிதக் குழப்பத்துடனும் நம்பிக்கையின்றியும் காணப்படுகின்றனர். மனநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் வயது என்பதால் மனரீதியாகவும் பல பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்று குழந்தைகள், பதின்வயதினர் மன அழுத்தத்தில் இருப்பது முதல் தவறான குற்றச்செயல்களில் ஈடுபடுவதுவரை நடக்கிறது.

எனவே, டீன்-ஏஜ் எனும் இந்த பதின் வயது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் கடின காலம்தான். இந்த காலகட்டத்தில் அவர்கள் குழப்பம், தன்னைப் பற்றிய சந்தேகங்கள், மன அழுத்தம், சமூகத்தில் பல எதிர்பார்ப்புகள் என உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

பதின் வயதினருக்கு இன்று பெரும்பாலும் பொழுதுபோக்கு என்பது மொபைல்போன்தான். இளம் வயதினர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி நிபுணர்கள் பலரும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பதின்வயதினருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஸ்மார்ட்போனும் சமூக ஊடகங்களும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

பதின்வயதினருக்கு ஏற்படும் பிரச்னைகள்

1. மனச்சோர்வு மற்றும் பதட்டம்

அறிகுறிகள்: எரிச்சல், தூக்கத்தில் மாற்றம், பொழுதுபோக்குகளில் ஆர்வமின்மை.

இதற்கு எதிர்மறை எண்ணங்களை போக்கவைக்கும் சிபிடி எனும் அறிவுசார்ந்த சிகிச்சை அளிக்கலாம். குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் பேசுவதற்கு பெற்றோருக்கு பயிற்சி அளிக்கலாம்.

2. ஆபத்தான நடத்தைகள் (போதைப்பொருள் பயன்படுத்துவது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, பொறுப்பற்ற உடலுறவு)

அறிகுறிகள்: ரகசியமாக யாருக்கும் தெரியாமல் இருப்பது, திடீர் நண்பர்கள் குழு, உடலில் காயங்கள்.

உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய டிபிடி(DBT) எனும் சிகிச்சை பெறலாம். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனைச் சரிசெய்ய பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உளவியல் சிகிச்சை அளிக்கலாம்.

3. பள்ளிக்குச் செல்ல மறுப்பது மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலை.

அறிகுறிகள்: வகுப்புகளைத் தவிர்ப்பது, தேர்வினால் ஏற்படும் பீதி.

சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதன் காரணம் என்னவென்று கண்டறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் யாரேனும் தொந்தரவு செய்கிறார்களா? உடல்ரீதியாக பிரச்னை இருக்கிறதா? என எனக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை.

4. சமூக ஊடகங்கள் மற்றும் உடல்சார்ந்த பிரச்னைகள்

அறிகுறிகள்: மற்றவர்களுடன் ஒப்பிடுவது, அதிகமாக டயட்டில் இருப்பது.

சமூகம் பற்றிய பதட்டத்தைக் குறைக்கவும் உடல்சார்ந்த தாழ்வு மனப்பான்மையைக் களையவும் குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டும்.

5. குடும்பத்தில் சண்டை மற்றும் தகவல் தொடர்பு இல்லாதது.

அறிகுறிகள்: சண்டையில் எப்போதும் வாதம் செய்வது, அமைதியாக இருப்பது.

குழந்தைகளின் கோபத்திற்கான காரணத்தை புரிந்துகொண்டு அதை முதலில் சரிசெய்த பின்னர் அவர்களின் கோபத்தைக் குறைக்க பயிற்சி வழங்கலாம்.

ஆபத்தான அறிகுறிகள்

உங்கள் பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தாலோ அல்லது ஏதாவது ஒரு செயலில் இருந்து திடீரென பின்வாங்கினாலோ அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

அதேபோல திடீரென தேர்வில் மதிப்பெண்கள் குறைவது அல்லது தேர்வைத் தவிர்த்தாலோ, பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்தாலோ கவனம் செலுத்த வேண்டும்.

உடலில் காயங்கள் இருந்தால், தூக்கத்தில் மாற்றம் (இரவில் விழித்திருப்பது, ஆழ்ந்த தூக்கம் இல்லாதது), உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல்

நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பெற்றோருக்குத் தெரியாமல் ஸ்மார்போன் பயன்படுத்துவது அல்லது இணைய பயன்பாடு, ஆபத்தான நண்பர்கள் குழுவினருடன் தொடர்பில் இருத்தல்

அடிக்கடி அல்லது திடீரென அழுவது, கோபம், தனிமையில் இருத்தல் என உணர்ச்சி ரீதியான மாற்றங்கள்.

குடும்பத்தில் உள்ள பிரச்னைகளினால் பாதிக்கப்படுவது,

இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக உங்கள் பதின்வயது குழந்தைகள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் பாதிக்கப்பட்டால் உடனடியாக கவனத்தில் கொண்டு அதற்கு உளவியல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

என்னென்ன சிகிச்சை அளிக்கலாம்?

சிபிடி எனும் அறிவாற்றல் சார்ந்த நடத்தை சிகிச்சை(Cognitive Behavioral Therapy) இது எதிர்மறை எண்ணங்களை சரிசெய்ய உதவுகிறது.

டிபிடி எனும் இயக்கவியல் நடத்தை சிகிச்சை(dialectial behavioral therapy). இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் அல்லது காயப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

பெற்றோர் மற்றும் இளம்வயதினருக்கு இடையேயான பிரச்னையை சரிசெய்யும் உளவியல் சிகிச்சை.

பிரச்னைகளில் இருக்கும் இளம் வயதினருக்கு பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்துவது.

மன அழுத்தம், ஏடிஹெச்டி அல்லது பதட்டம் இருப்பவர்கள் மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

கல்வி அல்லது பள்ளியில் உள்ள பிரச்னைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி சரிசெய்ய வேண்டும்.

பெற்றோர்களும் காரணமாக இருக்கலாம்!

தங்களுடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும், ஏதேனும் ஒரு துறையில் அல்லது கலையில் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து பெற்றோர்களே குழந்தைகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக கொச்சியைச் சேர்ந்த மூத்த உளவியல் நிபுணர் டாக்டர் சிஜே ஜான் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், "குறிப்பாக பிள்ளைகள் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள் என்றால் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என எப்போதும் படித்துக்கொண்டே இருக்க கட்டாயப்படுத்துகின்றனர். வீட்டிலேயே பல விதிமுறைகளை விதிக்கின்றனர். தாங்கள் நினைக்கும் மதிப்பெண் வரவில்லை என்றால் தண்டனை வழங்கும் அளவுக்குச் செல்கின்றனர். இதனாலும் பதின்வயது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரத்தில் இன்னொரு தரப்பு பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும் வராமல் பாதுகாத்து வளர்கின்றனர். அவர்களுக்கு வரும் பிரச்னைகளை தாங்களே முன் நின்று சமாளிக்கின்றனர். இந்த இரண்டு வளர்ப்பு முறையுமே தவறு" என்கிறார் டாக்டர் ஜான்.

"டீன்- ஏஜ் என்பது சாதாரணமானதுதான். குழந்தைகளுக்கு அழுத்தம் தராதவண்ணம் அதேநேரத்தில் அவர்களுக்கு பிரச்னைகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். பதின்வயது குழந்தைகள் உடல், மனரீதியாக பிரச்னை இருந்தது தெரிந்தால் அவர்களிடம் பேசி காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் கண்டிப்பாக ஒரு உளவியல் நிபுணரை அணுகுவது நல்லது. மருந்துகள், உளவியல் சிகிச்சை அவர்களுக்கு தேவைப்படலாம்.

அதேபோல பதின்வயதினருக்கு ஏற்படும் பிரச்னை உடனே சரியாகிவிடும் பிரச்னை அல்ல. அதற்கு சில காலம் ஆகலாம்" என்கிறார்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி உலக அளவில் 10-19 வயதுடையோரில் 7-ல் ஒருவர் மன அழுத்தம், பதட்டம், நடத்தைகளில் மாற்றங்கள் என மன ரீதியாக பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

எனவே, பதின்வயதினரிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்கள் பொதுவானதுதான் என்றாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிந்தால் பிரச்னை அதிகமாவதற்கு முன் அதனைக் கண்டறிந்து சரிசெய்வது நல்லது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க | கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

நாட்டில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?

நாட்டில் சிறுநீரக பாதிப்பு அமைதியான முறையில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் தற்போது இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் நகரங்களிலும்... மேலும் பார்க்க

ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்றுநோயாக இருக்கலாம்! - மருத்துவர் நேர்காணல்!

- டாக்டர் ஆர். பாலாஜி என்னுடைய 20 வருட அனுபவத்தில் சமீபமாக நான் ஆர்வமாக செய்யக்கூடிய அறுவை சிகிச்சை தைராய்டு அறுவை சிகிச்சை. ஏனெனில் மற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளுமே புதிதாகப் படித்து முடித்தவர்கள்கூட... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் எ... மேலும் பார்க்க

கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

அமர்ந்தே வேலை செய்பவரா? உடல் பருமன் கொண்டவரா? அதிக எடையை தூக்குகிறீர்களா? நீண்ட நாள்கள் முதுகின் கீழ் வலி இருக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு முதுகெலும்பில் பிரச்னை இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு ஆன்டி - பயாடிக் எடுக்கலாமா? தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? - மருத்துவர் சொல்வது என்ன?

- டாக்டர் ராமசுப்ரமணியன் கிருமிகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் அனைத்துமே தொற்றுநோய்களின் கீழ் வரும். இது எங்கும் பரந்து விரிந்திருக்கக் கூடியது. இது பாக்டீரியாவாகவோ வைரஸாகவோ பூஞ்சைகளாகவோ இருக்கலாம். ஒட்ட... மேலும் பார்க்க