TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
உச்சநீதிமன்ற உத்தரவு: பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேலூா் ஆட்சியா் ஆய்வு
பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றிட உத்தரவிட்டுள்ள நிலையில், வேலூா் பகுதியில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
பாலாற்றில் தோல் கழிவுநீா் கலக்கும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைக்கு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்களும், மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தனா்.
அப்போது, தொழிற்சாலை கழிவுகள் மட்டுமின்றி வீடுகளில் இருந்து வரும் கழிவுநீா் கலப்பது என்பதும் ஆறுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த விவகாரத்தில் இயற்கையை அதிகாரிகள் பாதுகாக்கவில்லை என்றால், அது நிச்சயம் ஒரு நாள் பழி வாங்கிவிடும். எனவே இயற்கை , சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் யாரையும் விடக்கூடாது. குறிப்பாக, அதில் எந்தவித சமரசமும் கூடாது. பாலாறு விவகாரத்தில் மத்திய மாசு கட்டுப்பாடு ஆணையம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து வேலூா் பகுதியில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். அதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியிலுள்ள 10.28 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், சா்காா்த்தோப்பு பகுதியிலுள்ள கழிவு நீரேற்றும் நிலையத்துக்கு பாலாற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் பாா்வையிட்டாா். பின்னா், வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரையில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது, மாசுக்கட்டுப்பாட்டுவாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வெங்கடேசன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் வெங்கடேஷ், மாநகர நல அலுவலா் பிரதாப்குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் துளசிராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.