விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்
உடல் முழுக்க சல்வாரால் மூடப்பட்ட படம், துல்லியமாக மச்சத்தை அம்பலப்படுத்திய ஏஐ! மக்களே உஷார் உஷார்!
‘சமூக வலைதள வைரல் டிரெண்டுகளில் கலந்துகொள்ளவில்லை என்றால், ஆன்லைன் குத்தம் ஆகிவிடும்’ என்ற மனநிலையிலேயே இன்று பலரும் உள்ளனர். அந்த வகையில், ‘நானா பனானா’ எனப்படும் ஏஐ டூல் (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கிய தங்களது புகைப்படங்களை சமீபத்தில் தெறிக்கவிட்டனர் நெட்டிசன்கள்.
கூகுள் நிறுவனம்தான், சென்ற மாதம் ‘நானோ பனானா’ டூலை அறிமுகப்படுத்தியது. இதைப் பயன்படுத்தி, தங்களது சாதாரண புகைப்படங்களை 3டி உருவங்கள், ரெட்ரோ புடவை புகைப்படங்கள் என ‘சினிமா தோத்தது போ’ ரேஞ்சில் உருவாக்கிப் பகிர்ந்து சிலாகித்தனர் மக்கள்.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை இந்த டிரெண்டில் போட்டி போட்டுக்கொண்டு இணைய, உலகிலேயே அதிகம் ‘நானோ பனானா’ பயன்படுத்தும் நாடாகியுள்ளது இந்தியா. இதற்கிடையே, ‘புகைப்படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகளை உள்ளீடு செய்யும்போது, அவற்றை கூகுள் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனது ஏஐ செயலிகளுக்குப் பயிற்சியளிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவற்றை கூகுள் பயன்படுத்தலாம்’ என்று எச்சரித்தனர் நிபுணர்கள்.
இதை உறுதிப்படுத்துவது போலவே, ‘‘நான், ‘நானோ பனானா’ டூலில் உள்ளீடு செய்த புகைப்படத்தில் என் உடலை முழுக்க மூடி சல்வார், துப்பட்டா அணிந்திருந்தேன். ஆனால், அது உருவாக்கி அளித்த புகைப்படத்தில், என் கையில் உள்ள மச்சம் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்’ என்று வட இந்திய இளம்பெண் ஒருவர் தெரிவிக்க, அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது, ஆன்லைன் உலகம்.

`ஏற்கெனவே, கூகுள் போட்டோஸ், கூகுள் வொர்க்ஸ்பேஸ், கூகுள் கிளவுட் சேவை என நாம் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும், தன்னுடைய நானோ பனானா டூலுடன் திருட்டுத்தனமாக பகிர்கிறது கூகுள். அப்படி, நாம் பகிர்ந்திருக்கும் படத்தில் மச்சம் தெரிந்திருந்தால், அதையும் இந்த நானோ பனானா டூல் பயன்படுத்திக் கொள்கிறது’ என்று பலரும் பதறினர். ஆனால், ‘கூகுள் பயனர் தகவல்கள் எதையும் நானோ பனானா டூலுடன் நாங்கள் பகிர்வதில்லை. உள்ளீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் இல்லாத ஏதேனும் அங்க அம்சம் ஏஐ படத்தில் இடம்பெற்றிருந்தால், அது எதேச்சையாகத்தான் நடந்திருக்கும்’ என்று மறுத்துள்ளது கூகுள். ஆனால், `இதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள், வல்லுநர்கள்.
பொது தளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் என பகிரும்போது, புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது முதல், வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடப்படுவது வரையிலான பேராபத்துகள் நிறைந்தே உள்ளன. அதனால், ‘ஏஐ டூல்களில் தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்கள், லொக்கேஷன்களை பகிராமல் இருப்பது, பிரைவஸி செட்டிங்ஸை இறுக்குவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுங்கள்’ என்று பரிந்துரைக்கின்றனர், சைபர் குற்றத்தடுப்பு நிபுணர்கள்.
எல்லாவற்றையும் தாண்டி... ஒரு ரூல்தான் இங்கு உண்மை தோழிகளே... நம் புகைப்படங்கள், நம் தகவல்கள், நம் பணம்... நம் பொறுப்பு!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்