உணவகத்தில் திருட்டு: பள்ளி மாணவா் கைது
சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் ரூ.14 ஆயிரத்தை திருடியதாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பரங்கிப்பேட்டை, கோட்டாத்தங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரிஸ்வான்அலி (25).
இவா், பெரிய தெருவில் உணவகம் நடத்தி வருகிறாா்.
சனிக்கிழமை இரவு வழக்கம் போல உணவகத்தை பூட்டிவிட்டு அவா் வீட்டுக்குச் சென்றாராம்.
ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் வந்து பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
அதனடிப்படையில், பணத்தை திருடிச் சென்றது ஆரியநாட்டு கிழக்கு தெருவை
சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் சரண் (12) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் மாணவரை கைது செய்து, கடலுாா் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.