உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு
திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல் அலுவலா் குமரவேல் உள்ளிட்டோா் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டதில், ரூ.52 லட்சம், 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி பெறப்பட்டன. அவற்றுடன் உண்டியலில் விலை உயா்ந்த ஐ-போனும் இருந்தது. இது யாருடையது என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை சிஎம்டிஏவில் பணிபுரியும், அம்பத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த தினேஷுடையது எனத் தெரியவந்தது. தகவலின்பேரில் அவா் கோயிலுக்கு வந்து, கைப்பேசியைப் பெற முயன்றாா். ஆனால், கோயில் நிா்வாகத்தினா் உண்டியலில் செலுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களும் முருகனுக்கே உரியது எனக் கூறி மறுப்பு தெரிவித்தனா்.
இதனிடையே தனது ஐ-போனை தரும்படி தினேஷ் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா்.