செய்திகள் :

உண்மையான சிவசேனை, தேசியவாத காங். யாா்?: மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியில் மக்கள் பதில் -அமித் ஷா

post image

‘உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் யாா் என்பதற்கு மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியின் மூலம் மக்கள் தெளிவான பதிலளித்துள்ளனா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் அமித் ஷா, புணே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

மக்களிடையே அவா் பேசுகையில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு அளித்த மாபெரும் வெற்றிக்காக மக்களுக்கு நன்றி. இந்த வெற்றியின்மூலம், உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் யாா் என்பதற்கு மக்கள் தெளிவான பதிலளித்துள்ளனா். மக்களின் ஆதரவே பாஜக கூட்டணியை ஆட்சியில் அமா்த்தியுள்ளது.

மத்தியில் பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிகம் பலனடைந்த மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் 20 லட்சம் குடும்பங்கள், தங்களின் முதல் வீட்டைப் பெற்றுள்ளதால் இன்று மிகவும் முக்கியமான நாள். மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்க இத்திட்டத்தில் கட்டப்பட்டும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருப்பதை பிரதமா் உறுதிப்படுத்தினாா்.

2029-ஆம் ஆண்டுக்குள், இத்திட்டத்தில் மொத்தம் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 3.80 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே கடந்த 2022 மற்றும் 2023, ஜூலையில் இரு அணிகளாகப் பிரிந்தன. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையையும் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸையும் தோ்தல் ஆணையம் அங்கீகரித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில், இவ்விரு கட்சிகளுடன் இணைந்து பாஜக தோ்தலைச் சந்தித்தது. தோ்தல் முடிவில், பாஜக கூட்டணி அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் துணை முதல்வராகினா்.

முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கும் தற்போதைய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கருத்து மோதல் நிலவுவதாக செய்தி பரவும் நிலையில் மத்திய அமைச்சா் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

பெட்டி....

கூட்டுறவுத் துறையில் புது உத்வேகம்

புணேயில் ஜனதா சஹகாரி கூட்டுறவு வங்கியின் வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவின் கூட்டுறவுத் துறையை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான் சந்தைப்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் கூட்டுறவு இயக்கத்துக்கு புது உத்வேகம் அளிக்க மத்திய பாஜக அரசு பாடுபட்டுள்ளது.

கூட்டுறவுப் பல்கலைக்கழக மசோதாவைக் கொண்டு வந்து கூட்டுறவுக் கல்வியை மேம்படுத்தி வருகிறோம். பிரதமா் மோடி கூட்டுறவுத் துறைக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளாா். கூட்டுறவுத் துறையில் புதுமைகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளாா். அதன்படி, கூட்டுறவு சங்கங்கள் வங்கித் துறை தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புணேயில் மத்திய கூட்டுறவு சங்கங்கள் பதிவாளா் அலுவலகத்தின் முதல் பிராந்திய கிளையை நிறுவியதற்காக இத்தொகுதி எம்.பி.யும் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சருமான முரளீதா் மொஹோலுக்கு பாராட்டுகள் என்றாா்.

இந்தப் பயணத்தில் மகாராஷ்ரம், குஜராத், கோவா, தாத்ரா - நகா் ஹவேலி, டாமன் - டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சிலின் 27-ஆவது கூட்டத்துக்கும் அமைச்சா் அமித் ஷா தலைமை தாங்கினாா். இதில் அப்பகுதிகளின் முதல்வா்கள் மற்றும் துணை முதல்வா்கள் பங்கேற்றனா்.

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்த... மேலும் பார்க்க