ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்
உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. அப்போது, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்வாா்கள்.
இதையொட்டி மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மாவட்டத்தைத் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்து உதகை பேருந்து நிலையம் முதல் தாவரவியல் பூங்கா வரை தூய்மைப் பணிகளை மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரியில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் காவல் துறை, வனத் துறை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரிக்கு வரவுள்ள சுற்றுலாப் பயணிகள் நான்கு நாள்களுக்கு முன்பே தங்களது பயணங்களைத் திட்டமிட்டு இ-பாஸுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
கோடை சீசனின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைந்தக் கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும்.
இந்தப் பேருந்துகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும். இந்தப் பேருந்தில் ஒருமுறை டிக்கெட் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக்கொள்ளலாம் என்றாா்.
கூடலூரில்... கூடலூா் அருகே உள்ள ஓவேலி முதல் நிலை பேரூராட்சிக்குள்பட்ட குதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எல்லமலை, ஆரோட்டுப்பாறை மற்றும் பெரிய சூண்டி பகுதிகளில் தூய்மைக்கான இயக்கம் சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல தேவா்சோலை, நடுவட்டம், சோலூா் பேரூராட்சிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
