உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி
உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் தொடங்கிய இப்பேரணி ஹில்பங்க், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாலை, சேரிங்கிராஸ் வழியாக லவ்டேல் ஜங்ஷன் வரை நடைபெற்றது. இப்பேரணியில் காவல் துறையினா் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் தலைக்கவசம் அணிந்து சென்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷாவும் பேரணியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.
பேரணியில் சென்றவா்கள், சாலை விதிகளை மதிப்போம், தலைக்கவசம் உயிா் கவசம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.