உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா்.
மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை அரசு விருந்தினா் மாளிகையில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், உதகை ஒன்றியத்துக்குள்பட்ட 20 பழங்குடியின மக்களுக்கு பி.எம். ஜன்மன் திட்டத்தின்கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குடிநீா் இணைப்பு பணிகளுக்காக ரூ.28 கோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளாா். இந்தப் பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவுபெற்று மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.
குன்னூா் - உதகை இடையே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சு.வினீத், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வன அலுவலா் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.