கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கல்லூரி முதல்வா் சுபாஷினி தொடங்கிவைத்தாா். மாணவா்கள் கோழிப்பாலம் சந்திப்பிலிருந்து கல்லூரி வளாகம் வரை பேரணியாக வந்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற முகாமில், கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா், மருத்துவா் சந்தானம், வழக்குரைஞா் மலைச்சாமி, சிறப்பு வட்டாட்சியா் நடேசன், ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் ஆகியோா் உரையாற்றினா்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், கூடலூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜான், பேரு, கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி விரிவுரையாளா்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக உலக தாய்மொழி தினத்தையொட்டி, அனைத்து மாணவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள், அலுவலக பணியாளா்கள், முதல்வா் சுபாஷினி தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.