கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது
மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35).
பொக்லைன் ஓட்டுநரான இவா், நீலகிரி மாவட்டம் மஞ்சூா் பகுதியில் பணியாற்றி வருகிறாா். மஞ்சூரை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (30). இவா், குந்தா வனத் துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.
நண்பா்களான இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த ரவிசந்திரன், தான் வைத்திருந்த அரிவாளால் கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் தலை, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட அந்த வழியாக வந்தவா்கள், இதுகுறித்து மஞ்சூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் கிருஷ்ணனை மீட்டு மஞ்சூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து மஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.