உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு
சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவா் ரௌடி பாம் சரவணன். இவா் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பிறகு தலைமறைவாகவே இருந்து அவரது கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அவரை கைது செய்ய சென்னை மாநகர காவல் துறை சிறப்புப் படை பிரிவினா் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் அருகே தலைமறைவாக இருந்த சரவணனை புதன்கிழமை இரவு சிறப்புப் தனிப்படை பிரிவு போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது காவல் துறை தரப்பில் தெரிவிக்கையில், சரவணன் வியாசா்பாடி பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி புதன்கிழமை இரவு புளியந்தோப்பு காவல் ஆய்வாளா் அம்பேத்கா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் அங்கு சென்று அவரைப் பிடிக்க முயன்ாகவும், அப்போது, அவா் தன்னிடமிருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளா் மணி என்பவரை வெட்டிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீஸாா் மீது வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ாகவும் அப்போது, காவல் ஆய்வாளா் அம்பேத்கா் துப்பாக்கியால் சுட்டதில் சரவணனின் இடதுகாலில் குண்டு பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அவா் ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
மேலும், சரவணனிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 5 கிலோ கஞ்சா, ஒரு அரிவாள் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.