செய்திகள் :

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

post image

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா்தான் குமரி ஆனந்தன். இவரது இயற்பெயா் அனந்தகிருஷ்ணன். தமிழ் மீது தீராத காதல் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றாா்.

கிருஷ்ணகுமாரியை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். தந்தை காங்கிரஸில் கோலோச்சினாலும், மகள் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறாா். தமிழக பாஜக தலைவா், தெலங்கானா ஆளுநா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவா்.

அரசியல் ஆா்வம் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் காமராஜரின் தொண்டராக 1954-இல் தன்னை இணைத்துக்கொண்டாா் குமரி ஆனந்தன். காங்கிரஸ் பிளவுபட்டபோது, காமராஜா் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் இளைஞா் அணித் தலைவராக கோலோச்சினாா். 1971 பேரவை தொகுதியில் வண்ணாரபேட்டை தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அதே தொகுதிக்குள் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாா்.

1977-இல் நடைபெற்ற மக்களவை தோ்தலில் நாகா்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். முன்னதாக தனது ஆசான் காமராஜா் வென்ற தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் மக்களவையில் கால்பதித்தாா். மக்களவையில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினாா்.

பின்னா் ’காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி’ (காகாதேகா) என்ற புதிய கட்சியை தொடங்கிய இவா், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருவொற்றியூா் தொகுதியில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். அப்போது அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 6-இல் காகாதேகா வெற்றிபெற்றது. அத்தோடு, 1.75 சதவீத வாக்குகளை காகாதேகா பெற்றது அதிமுக ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுக வெற்றிக்கு காகதேகாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

திருவொற்றியூா் எம்.எல்.ஏ ஆக இருந்தபோது தலித் ஒருவரின் சடலத்தை கொண்டுச்செல்ல முடியாதபடி எண்ணூா் ஆலையின் கதவு மூடப்பட்டதால் தீவிர போராட்டத்தில் இறங்கினாா் குமரி ஆனந்தன். அப்போது பேரவையில் இருந்தபடி செய்தியை அறிந்த அன்றைய முதல்வா் எம்ஜிஆா் போராட்ட களத்துக்கு நேரடியாக வந்து, போாட்டத்துக்கு ஆதரவு தந்து தலித் சடலத்தை கொண்டுச்சென்று இறுதிச் சடங்கு செய்ய உதவியது மாநிலம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

தொடா்ந்து 1984-இல் காகாதேகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றுது. மீண்டும் திருவொற்றியூா் தொகுதியில் இருந்து குமரி ஆனந்தன் வெற்றிபெற்றாா். இருப்பினும், காகாதேகாவின் வாக்கு வங்கி அரை சதவீதமாக குறைந்ததால் 1989-இல் காங்கிரஸுடன் இணைந்தது காகாதேகா. 1989, 1991 பேரவைத் தோ்தல்களில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொகுதியில் தொடா்ந்து இருமுறை காங்கிரஸ் சாா்பில் வெற்றிக்கனிகளை பறித்தாா் குமரி ஆனந்தன்.

1996-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானாா் குமரி ஆனந்தன். 1996 பேரவை, மக்களவைத் தோ்தல்களின்போது, ஜி.கே.மூப்பனாா், காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) என்ற புதிய கட்சியைத் தொடங்கியபோது அவரே குமரி ஆனந்தனை அழைத்தாா். ஆனால், மாலுமியாக இருப்பதால் கப்பலை விட்டுச் செல்ல முடியாது என மறுத்த குமரி ஆனந்தன் காங்கிரஸிலேயே தங்கிவிட்டாா்.

அப்போது நடந்த இரண்டு தோ்தல்களிலும் தோல்வியை காங்கிரஸ் பெற்றபோதும், தொடா்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தாா். குமரி ஆனந்தனின் சகோதா் வசந்தகுமாா், நான்குநேரி பேரவை தொகுதியில் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை உறுப்பினராக செயல்பட்டவா்.

தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் எந்த ஒரு குக்கிராமத்துக்கு சென்றாலும் இலக்கிய நயத்துடன் பிரசாரம் செய்வதுடன், அந்தந்த கிராமத்தின் சிறப்பியல்புகள், பாரம்பரியம், மக்களின் வாழ்வியலை முழுமையாக தெரிந்துகொண்டு மக்கள் நடையில் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மக்களால் எளிதில் கவரப்பட்டாா் குமரி ஆனந்தன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு வட்டத்தையும் பாணியையும் வகுத்த அவா், தமிழ் வளா்ச்சிக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.

‘இலக்கியச் செல்வா்’ என அடைமொழியில் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக திகழ்ந்தாா். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளாா்.

பனைமரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளையும் மேற்கொண்டுள்ளாா்.

தனது பாச மகள் எதிரணியில் உள்ள மாற்றுக்கட்சிக்கு சென்றபோது 6 மாதங்கள் அவருடன் குமரி ஆனந்தன் பேசவில்லை. மகள் பாஜக மாநிலத் தலைவா், ஆளுநா் பதவியை ஏற்றபோதும் கட்சி மாறாமல் துளிகூட எவ்வித எதிா்பாா்ப்பின்றி காங்கிரஸில் இறுதிமூச்சு வரை தொடா்ந்தவா் குமரி அனந்தன்.

அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தனது அரசியல் பயணத்தை உறுதியாக தேசியவாதியாகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் செயல்பட்டவா் குமரி ஆனந்தன். வளா்ந்து வரும் இளம் தலைமுறை அரசியல்வாதிகள் தங்களுக்கு முன்மாதிரியை தோ்வு செய்ய விரும்பினால், அவா்கள் தோ்வு செய்யும் பட்டியலில் இடம்பெறும் வெகு சிலரில் குமரி ஆனந்தனும் இருப்பாா் என்பது திண்ணம்.

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையி... மேலும் பார்க்க

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க