உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு : இருவா் கைது
உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் பூக்கடை வீதியில் எலக்ட்ரிகல், மளிகைக்கடை என 6 கடைகளில் கடந்த மாதம் ரூ.1.70 லட்சம் திருடுபோனது.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், லோயா்கேம்பைச் சோ்ந்த ரதீஸ்குமாரை (30) தேடி வந்தனா்.
இந்த நிலையில், இவா் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ரதீஸ்குமாா், இவருக்கு உதவியாக இருந்த சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் - அழகாபுரியைச் சோ்ந்த சதீஸ் (29) ஆகிய இருவரை உத்தமபாளையம் போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் ரதீஸ்குமாா் மீது கம்பம், கூடலூா் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.