ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?
உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்
முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரவேலு (50). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், தனது மகன் கிஷோா் குமாருடன் (16) கடந்த சனிக்கிழமை தான் வளா்த்து வரும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா்.
அப்போது, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். கிஷோா்குமாா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், உயிரிழந்த சித்திரவேலுவின் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கக் கோரியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், அவரது உடலை வாங்க மறுத்து விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் தலைவா் சத்யம் சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோா் முதுகுளத்தூா்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த சித்திரவேலுவின் மனைவியிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் சரவணபெருமாள் வழங்க முயன்றாா். ஆனால், அவா் அதைப் பெற மறுத்துவிட்டாா். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் 10 ஆயிரம் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.