பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்...
'உறவுகளுடன் தனிப்பட்ட நிகழ்வு!' - மாமல்லபுரத்தில் கரூர் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறவிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அன்றிரவே விஜய் கரூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்துவிட்டார். மூன்று நாட்கள் கழித்து 'உண்மைகள் விரைவில் வெளியில் வரும்.' என ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதன்பிறகு, தவெக கட்சி முழுமையாக Shut Down ஆகியிருந்தது. முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகியிருந்தனர். கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டது.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பை நிகழ்த்துவதற்கான இடமும் காவல்துறையின் அனுமதியும் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக தவெக தரப்பில் கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். அக்டோபர் 18 ஆம் தேதி உயிரிழந்தோரின் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் தவெக தரப்பில் ஏற்றப்பட்டது. அந்தக் குடும்பங்களுக்கு விஜய் எழுதிய கடிதத்திலும், 'அனுமதி கிடைத்தவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.' என்றே கூறியிருந்தார். ஆனால் திடீரென இந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை தவெக தரப்பு தொடங்கியது.

'கரூரில் அந்த மக்களை சந்திப்பதற்காக இடத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆளும் தரப்பு இட உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. காவல்துறையும் அனுமதி கொடுக்க பல கெடுபிடிகளை விதிக்கிறது. இதனால் மீண்டும் அந்த மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் அவர்களை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறுகிறோம். மேலும், துக்கம் நிகழ்ந்த 30 வது நாளுக்குள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்படியொரு ஏற்பாடு.' என தவெக தரப்பு காரணம் கூறியது.
இந்நிலையில், நேற்று கரூரிலிருந்து 5 ஆம்னி பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தவெகவின் முக்கிய மா.செக்கள் தலைமையில் சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று மட்டும் கரூரிலிருந்து 33 குடும்பத்தினர் கிளம்பியதாக தவெகவினர் கூறுகின்றனர். ஒரு சிலரை தவிர்த்து எஞ்சியோரை வேறு வழிகளில் அழைத்து வருவதாகவும் தவெகவினர் தகவல் சொல்கின்றனர்.

தவெகவின் இரண்டாமாண்டு தொடக்க விழாவை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விஜய் நடத்தியிருந்தார். அதே ரெசார்ட்டில்தான் இப்போது இந்த கரூர் குடும்பத்தினரையும் விஜய் சந்திக்கவிருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு அறை என ஒதுக்கியிருக்கிறார்கள். விஜய் ஒவ்வொரு அறையாக சென்று அத்தனை குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் திட்டம் என்கின்றனர். காலை 10 மணி தொடங்கி மாலைக்குள் இந்த சந்திப்புகளை நிகழ்த்தி முடிக்கும்படி திட்டம் வகுத்திருக்கின்றனர். 'இது ஒரு அறிவிக்கப்பட்ட பொது நிகழ்வு அல்ல. உறவுகளை சந்திக்கும் தனிப்பட்ட நிகழ்வு. அதனால் புகைப்படங்களோ வீடியோக்களோ கூட வெளியில் வராது.' என தவெக தரப்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.


















