Idly Kadai BTS: ``சாணம் படிந்த கையோடு தேசிய விருது..." - நித்யா மெனேன் நெகிழ்ச்ச...
LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained
'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு...'
இது நேற்று காலை அமெரிக்க செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்'டில் வெளியான செய்திக் கட்டுரை. இது வெளியான நொடி முதல் இந்தியாவில் பல்வேறு புயல்களையும், பூகம்பங்களையும் கிளப்பி வருகிறது.
அப்படி என்ன அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது என்பதை முதலில் பார்ப்போம்...
"கடந்த மே மாதம், இந்திய அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.32,000 கோடி (3.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான திட்டத்தைத் தயார் செய்திருந்தது.
இந்தத் திட்டத்தை இந்திய நிதி சேவைகள் துறை வரைவு செய்ய, இந்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, எல்.ஐ.சி அதானி துறைமுகப் பங்கில் கடந்த மே 30-ம் தேதி முதலீடு செய்துள்ளது.
அதானி குழுமத்தில் உள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி நிறுவனம் தனது அறிக்கையில் கூறுகிறது.

ஏன்?
எல்.ஐ.சி நிறுவனம் என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம். இது அடிப்படையில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது.
இதை நம்பி பல தரப்பட்ட இந்திய மக்கள் இந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகையை அரசு பத்திரங்களைவிட, மிக அதிக ரிஸ்க் உள்ள அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது ஏன்?
அதானியும், அவரது நிறுவனமும் ஏற்கெனவே சர்வதேச அளவில் சட்ட ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பெரிய அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த முதலீடு ஆபத்தாக முடியலாம்.
மோடி - அதானி
இந்திய பிரதமர் மோடியும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானியும் மிக நெருக்கமானவர்கள்.
அதானி குழுமத்தின் மீதான தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு, அதில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் வெளிநாட்டு வங்கிகள் தங்களது முதலீடுகளை விற்று வருகின்றனர்.
இதை சரிக்கட்டவும், அதானி குழுமத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை உருவாக்கவும் தான் இந்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், அதானி துறைமுகத்தைத் தாண்டி, எல்.ஐ.சியின் வேறு எந்த முதலீடு குறித்தும் தெளிவாக எதுவும் தெரியவில்லை".
- இது தான் அந்தக் கட்டுரையின் சாராம்சம்.

இதில் என்ன பிரச்னை?
எல்.ஐ.சி நிறுவனம் என்பது பொதுத்துறை நிறுவனம். இது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது.
மேலும், இந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருப்பவர்கள் ஏழை, எளிய மக்களே. இவர்களின் பணம் சர்வதேச அழுத்தங்கள் உள்ள ஒரு நிறுவனத்தில்... எந்தவொரு ஆய்வும், ஆராய்ச்சியும் இல்லாமல் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அது மிக மிக ஆபத்தானது.
அந்த நிறுவனத்திற்கு ஏதாவது ஆகும்பட்சத்தில், இந்த மக்களின் பணத்திற்கான பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்.
முன்னர் சொன்ன மாதிரி, எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் தானே தவிர, அரசு துறை அல்ல. அந்த நிறுவனத்தில் நிதி அமைச்சகம், நிதி சேவைகள் துறை தலையீடு இருந்தால் மிகவும் ஆபத்தானது.
அரசு, அரசாங்கம் என்று வந்துவிட்டாலே, அங்கே பெரும்பாலும் அரசியல் வந்துவிடும்... அரசியல் வந்தால் அங்கு மக்களின் நலன் பின்தள்ளப்படும்.
ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருந்தால், அது நிச்சயம் அதற்கும், அதன் கொள்கைக்கும் சாதகமானதாகவே இருக்கும். இந்த இடத்தில் நாம் நிச்சயம் யோசிக்கவேண்டியதாக இருக்கிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கை:
மிக முக்கியமாக, அதானியின் பக்கம். ஹிண்டன்பர்க் அறிக்கை... 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை கட்டாயம் நாம் மறந்திருக்க மாட்டோம்.
முதலீடுகளில் குழப்பம், பொய் என ஏகப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தது அந்த அறிக்கை. இதனால், ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருந்த அதானி குழுமத்தின் பங்குகளின் விலைகள், சீட்டுக் கட்டைப்போல சரிந்து விழுந்ததை மறக்கவே முடியாது.

இதன் பின், இன்னமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளின் மீது ஒரு சந்தேகக் கண் கொண்டே செயல்படுகிறார்கள்.
அப்படியிருக்கும் ஓர் இடத்தில், அரசியல் அல்லாமல் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்குமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதியாக வலுப்படுத்தும் விதமாக, மோடி - அதானி நட்பு உள்ளது. இவர்களது நட்பு இந்தியர்களுக்கு புதிது அல்ல.
தனது நண்பனுக்கு உதவ, சாதாரண இந்திய மக்களின் பணத்தின் பாதுகாப்பிற்கு உலை வைத்திருந்தால், அது மிகப்பெரிய பிரச்னை.
ஆனால், 'இது எதுவுமே உண்மை இல்லை...' என்று எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...
"எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்கிற தி வாஷிங்டன் போஸ்ட்டின் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் அடிப்படையற்றது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் ஃபண்டுகளை அதானி குழுமத்தில் இணைப்பதற்கான எந்தவொரு திட்டமும், ஆவணமும் இதுவரை எல்.ஐ.சி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை.
எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகள் அனைத்தும் சுதந்திரமாக நிறுவனத்தின் நிர்வாகிகளால் மட்டுமே கவனமாக எடுக்கப்படுகின்றன.

அதில் இந்திய நிதி சேவைத் துறை உள்ளிட்ட எந்தவொரு துறையின் தலையீடும் இல்லை.
எல்.ஐ.சி நிறுவனம் அதன் அனைத்து கொள்கைகளும், முதலீட்டு முடிவுகளும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது... மேலும், அதில் பங்குதாரர்களின் நலனும் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுகிறது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு பிறகு, எல்.ஐ.சி கூறுவது உண்மையா அல்லது எல்.ஐ.சி முதலீட்டு முடிவுகளில் இந்திய அரசின் தலையீடு இருக்கிறதா என்று சில பொருளாதார நிபுணர்களிடம் பேசினோம். அவர்கள் அனைவரும் கூறிய கருத்து இதோ!
"இந்தியாவின் முதல் ஊழல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியில் நடந்தது... இது எல்.ஐ.சியில் நடந்த முதல் ஊழலும் கூட. இந்த ஊழலுக்கு பெயர் 'ஹரிதாஸ் முந்த்ரா ஊழல்'. இது 1958-ம் ஆண்டு நடந்தது.
ஹரிதாஸ் முந்த்ரா கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வணிகர் (Trader). அவர் வாங்கிய நிறுவனத்தின் பங்குகளை எல்லாம், எல்.ஐ.சி நிறுவனத்தையும் வாங்க வைத்து அந்தப் பங்குகளின் விலை மிகவும் உயர்த்தப்பட்டது.

இதில் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த டி.டி.கே கிருஷ்ணமாச்சாரியின் பங்கும் இருப்பதாக நேருவின் மருமகனும், நேருவின் அமைச்சரவையில் உத்திரபிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஃபேரோஸ் காந்தியே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தவே, கிருஷ்ணமாச்சாரி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆக, எல்.ஐ.சி நிறுவன முதலீட்டில் இந்த மாதிரியான சம்பவங்கள் நடப்பது முதல்முறை அல்ல... அரசாங்கத்திற்கு தேவைகள் இருந்தபோதெல்லாம் இந்த ஊழல் நடந்திருக்கின்றன.
ஹர்சத் மேத்தா ஊழலில் தொடங்கி கேத்தன் பரேக்... என எல்.ஐ.சி நிறுவனம் சம்பந்தப்பட்டு ஊழல் பல உள்ளன.
இதற்கு காங்கிரஸ் அரசு, பாஜக அரசு என எந்த அரசும் விதிவிலக்கல்ல.
ஐ.டி.பி.ஐ வங்கி
முன்பு, அரசு பல நிறுவனங்களை விற்க வேண்டும் என்று நினைத்தது. அந்த நிறுவனங்களை வாங்கியது ஐ.டி.பி.ஐ வங்கி. இந்த வங்கியின் பின்னணியைப் பார்த்தால், அதன் பெரும்பாலான பங்கு அரசாங்கத்திடமும், எல்.ஐ.சியிடமும் தான் இருக்கின்றன.
ஒரு நிறுவனத்தை அரசாங்கத்தால் விற்க முடியாமல் போகிறபோது, அது தன்னுடைய ஒரு பாக்கெட்டில் இருந்து இன்னொரு பாக்கெட்டிற்கு மாற்றும். இது தான் அரசாங்கத்தின் உத்தி. இப்படி எல்.ஐ.சியில் அனைத்து அரசாங்கங்களும் குளறுபடிகளும், மோசடிகளையும் செய்துள்ளன.
அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, தற்போது எல்.ஐ.சி நிறுவனம் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் லாபகரமானதாகவே இருக்கிறது.

இன்னொரு பக்கம், தற்போது அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் அதானி குழுமத்தின் மொத்த முதலீடுகளின் ஒரு மடுவின் அளவே.
AdaniENT, அதானி பவர், அதானி கிரீன், அதானி எனர்ஜி, அதானி துறைமுகம், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி அம்புஜா சிமென்ட், என்.டி.டி.வி, Adani Wilmar என அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14.70 லட்சம் கோடி. இதில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுவது ரூ.32,000 கோடி. இது வெறும் 2.17 சதவிகிதமே!
இந்த முதலீடு லாபகரமாக இருக்கும்பட்சத்தில், அரசாங்கத்திமோ அல்லது எல்.ஐ.சி நிறுவனமோ செய்த முதலீடுகள் சரியா... தவறா என்று சொல்ல முடியவில்லை.
ஆனால், இந்த ஊழல் புதிது ஒன்று இல்லை என்பது மட்டும் உறுதி.
அதானி குழுமத்திற்கு லாபமா?
எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்கிறது என்றால் இது அதானியின் பங்குகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்று பார்த்தால், நிச்சயம் கிடையாது.
எல்.ஐ.சி பெரிய வருமானம் கொடுக்கும் நிறுவனமும் அல்ல. அது பொதுத்துறையில் ஜம்பவானாக இருப்பதால், இதுகுறித்து பெரிதாக தெரியவில்லை. முதலீட்டு நிறுவனங்களிலேயே மிக குறைந்த விலையிலான பங்குகளை உடையது எல்.ஐ.சி.
எல்.ஐ.சி பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றாலும், கிட்டத்தட்ட அதன் 95 சதவிகித பங்கை அரசாங்கம்தான் வைத்துள்ளது. இது எப்போது 75 சதவிகிதமாக குறையும் என்று தெரியவில்லை.
இதில் அந்த அளவிற்கு வருமானம் தருவதில்லை என்பதால் மக்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதையெல்லாம் தாண்டி, மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று இருக்கிறது.
அமெரிக்காவிலேயே ஏகப்பட்ட ஊழல்கள், மோசடிகளும் மலிந்து கிடக்கின்றன. அப்படியிருக்கையில் வாஷிங்டன் போஸ்ட் இந்திய அரசாங்கம் குறித்தும், எல்.ஐ.சி நிறுவனம் குறித்தும் தற்போது செய்திக் கட்டுரை வெளியிடுவது ஏன்?

தற்போது இந்தியா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கின்றன... இந்திய - பாகிஸ்தான் மோதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் நிறுத்தினார் என்னும் அவரது கூற்றை இந்தியா முற்றிலும் மறுக்கிறது.
இந்த நிலையில் தான், இந்தச் செய்திக் கட்டுரை வெளிவந்திருக்கிறது.
மற்றொருபுறம் பார்த்தால், பாகிஸ்தானுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கிறது அமெரிக்கா. கனிமவள ஒப்பந்தம், கிரிப்டோ கரன்சி ஒப்பந்தத்தைத் தாண்டி, பாகிஸ்தான் ட்ரம்பின் மகன்களின் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
இதை இந்தியா செய்யவில்லை... இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இதை செய்யவே முடியாது. இதுதான் அமெரிக்காவிற்கு உள்ள ஒரு பெரும் பிரச்னை.
இந்தச் செய்திக் கட்டுரையை இந்திய அரசுக்கான நெருக்கடி நகர்வாகவே பார்க்கலாம்".
நாம் கவனிக்க வேண்டியவை...
எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், தி வாஷிங்டன் போஸ்ட் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படவே இல்லை. தங்களது பெயரையும், புகழையும் கெடுக்க வெளிநாட்டு செய்தி நிறுவனம் செய்திக் கட்டுரையை வெளியிடும்போது, ஏன் சட்ட நடவடிக்கைக்கு எல்.ஐ.சி நிறுவனம் செல்லவில்லை?
ஹிண்டன்பர்க் அறிக்கை விஷயத்தில் எங்கள் பெயருக்கு இந்தக் கட்டுரைகள் களங்கம் விளைவித்துவிட்டன என்று நீதிமன்றத்தின் படிகள் ஏறி, அந்தக் கட்டுரைகளை அழிக்க உத்தரவு வாங்கிய அதானி நிறுவனம் இன்னமும் இதுகுறித்து வாயைத் திறக்கவில்லை. ஏன்?
இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய அரசு துறைகளை சுட்டிக்காட்டி முன்வைத்துள்ளது. ஆனால், அது குறித்து இன்னமும் இந்திய அரசு வாயைத் திறக்கவில்லை ஏன்?
















