தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூடிய 48 சுற்றுலாத் தலங்களை அம்மாநில அரசு மூடியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இதனைத் தொடந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லையிலும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றன.
மேலும், பயங்கரவாதிகளின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளை இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் பயங்கரவாதிகள் (ஸ்லீப்பர் செல்கள்) சதித்திட்டங்களில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்ரீநகர் மற்றும் காந்தர்பால் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே உள்கட்டமைப்பை தகர்க்கவும், வெளியூர் ரயில்வே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் முகாமைவிட்டு வெளியேற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல், பயங்கரவாதிகளால் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.