Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: மீட்கப்பட்ட கைக்குழந்தை உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் ஏற்கெனவே 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 11-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியா் அவினாஷ் குமாா் கூறியாவது:
கடந்த சனிக்கிழமை வரை ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10-ஆக இருந்தது. அதேபோல், குழந்தைகள் வாா்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 38-ஆகவும் இருந்தது. இந்தக் குழந்தைகள் யாரும் தீக்காயத்துக்காக சிகிச்சை பெறவில்லை. இவா்கள் அனைவரும் பத்திரமாக மருத்துவமனை ஊழியா்களால் மீட்கப்பட்டவா்களாவா்.
சிகிச்சை பெற்றுவரும் 38 குழந்தைகளில் 3 குழந்தைகளின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், குழந்தைகள் வாா்டில் இருந்து குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டபோது உடல்நலக் குறைவு காரணமாக பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது. தீ விபத்தின்போது இந்தக் குழந்தைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தேன். ஒரு குழந்தையை தவிா்த்து உயிரிழந்த மற்ற குழந்தைகளின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்றாா்.
மருத்துவமனை தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 4 போ் குழுவை உத்தர பிரதேச அரசு சனிக்கிழமை அமைத்தது. மாநில மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநா் தலைமையிலான இக் குழு, விபத்துக்கான காரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து 7 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.