உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.
ஜான்சி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பாவிதத்தின்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த 49 பச்சிளங் குழந்தைகளில், 10 குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த நிலையில், தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட 39 குழந்தைகளில் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 18) மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் மீட்கப்பட்ட 39 பச்சிளங் குழந்தைகளில் மருத்துவமனையில் இப்போது 37 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 4 போ் குழுவை உத்தர பிரதேச அரசு சனிக்கிழமை அமைத்தது. மாநில மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநா் தலைமையிலான இக் குழு, விபத்துக்கான காரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து 7 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.