‘ஊட்டச்சத்து பெட்டகம்’ பயன்பாடு: வீடுகளுக்கு சென்று ஆட்சியா் ஆய்வு
பாலூட்டும் பெண்களுக்கு வழங்கப்பட்ட ‘ஊட்டச்சத்து பெட்டகம்’ பயன்பாடு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.உமா வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
கடந்த 2022-இல் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பல்வேறு பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து, கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் கீழ் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக பெட்டகம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2,299 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 3,812 பேருக்கும் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மோகனூா் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் பெற்ற குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரடியாகச் சென்று அவற்றின் பயன்பாடு குறித்தும், குழந்தைகள், தாயின் உடல் ஆரோக்கியம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.