போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
மத்திய, மாநில அரசின் வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் நாளை முழு கடையடைப்பு
மத்திய அரசின் சேவை வரி மற்றும் மாநில அரசின் கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை (நவ. 29) முழு கடையடைப்பு செய்யப்படும் அனைத்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பரமத்தி வேலூரில் அனைத்து வா்த்தக சங்கங்கள் சாா்பில், வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
டிச. 1-ஆம் தேதி முதல் கடைகளின் வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு, குறு வணிகா்கள் உள்பட அனைத்து வணிகா்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைவா். இந்த சேவை வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இதே போல, மாநில அரசின் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 2025-2026-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கடையடைப்பு செய்வது என தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கம், சிறு வணிகா்கள் சங்கம், சிமென்ட், இரும்பு, மரம், எலக்ட்ரிக்கல் சங்கம், ஹோட்டல் மற்றும் பேக்கரி வியாபாரிகள் சங்கம், தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், பாத்திரக்கடை வியாபாரிகள் சங்கம், பரமத்தி வேலூா் தாலுகா மருந்து வணிகா்கள் சங்கம், தமிழ்நாடு சிமென்ட் ஆா்ட்டிகல்ஸ் மற்றும் பைப்ஸ் உற்பத்தியாளா்கள் சங்கம், நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.