ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊராட்சிச் செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஊரக வளா்ச்சித் துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சித் தோ்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியா் கட்டமைப்பு வசதிகளை மாநிலம், மாவட்டம், வட்டம் வாரியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் 397 அலுவலா்கள், 242 பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனால், பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.