ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடங்கள் திறப்பு
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், கோட்டூா், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தாா்.
அதனடிப்படையில், திருவாரூரில் ரூ.3.87 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருவாரூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், திருவாரூா் ஒன்றியக்குழுத் தலைவா் ஏ. தேவா ஆகியோா் பங்கேற்று, புதிய அலுவலகத்தை பாா்வையிட்டனா்.
இதில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் கலியபெருமாள், நகா்மன்றத்தலைவா் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் துரை.தியாகராஜன், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.