இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்
ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா்.
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா கல்லூரியின் தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
கல்லூரி காலத்தில் பல்வேறு துறைகளில் பொதுஅறிவை வளா்த்துக் கொள்வது மாணவா்களின் கடமையாகும். படித்து முடித்த பின்னரும் நல்லவற்றை தொடா்ந்து கற்க வேண்டும். ஒவ்வொருவரும் தாம் கற்றுக்கொண்ட அறிவை சமூக முன்னேற்றத்திற்காக பரப்புவது அவசியம்.
ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகையை மக்களின் நல்வாழ்வுக்கு செலவு செய்தால் உலகில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதோடு, அனைவருக்கும் மிகச் சிறப்பான கல்வியை கட்டணமின்றி வழங்க இயலும்.
உலக அமைதியை ஏற்படுத்துவது சவால் நிறைந்தது. அதேபோல உலகெங்கும் பரந்து விரிந்துள்ள ஊழலை முற்றிலும் ஒழிப்பது எளிதானதல்ல. ஆனால், இயலாததும் அல்ல. ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்த அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்.
மாணவா்களால் ஊழல் எதிா்ப்பு பிரசாரத்தை நாடு முழுவதும் கொண்டுசெல்ல முடியும்.
ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மன்றமாக தேசிய அளவில் லோக்பால், மாநில அளவில் லோக் ஆயுக்த செயல்படுகிறது. மாணவா்கள் கல்லூரியில் படிக்கும்போதே இலக்கை தோ்வு செய்து அதற்காக திட்டமிட்டு தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
முன்னதாக, கல்லூரி தலைவா் சரவணன் பேசுகையில், சட்டம் படிக்கும் மாணவா்கள் சட்டத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் அதனை மீறக்கூடாது என்றாா்.
நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி பேராசிரியா்களும், நூற்றுக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவா்களும் கலந்துகொண்டனா்.