சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். விழாவுக்கு கல்லூரி தலைவா் சரவணன் தனபாலன் தலைமை வகித்து பேசியதாவது:
சட்டம் படிக்கும் மாணவா்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள், நாடாளுமன்றம், நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் அதிகாரங்களை தெரிந்துகொள்ளும் விதமாக இப்போட்டி அமைந்தது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்கள் நியமனமின்றி இருக்கும் நிலைமை பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள பல லட்சம் மாணவா்களின் கல்வி மற்றும் அதை சாா்ந்த பிரச்னைகள் குறித்து சட்ட மாணவா்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த மாதிரி நீதிமன்ற வாதப்போட்டி நடத்தப்பட்டது என்றாா்.
அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசை ஜெகநாதன், சினேகா, லத்திகா ஆகியோா் அடங்கிய அணியும், இரண்டாம் பரிசை சண்முகபிரியா, சஞ்சீவிகுமாா், தென்னரசி ஆகியோா் அடங்கிய அணியும் பெற்றன. முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியா் கா்ணன் வரவேற்று பேசினாா். நிறைவாக உதவி பேராசிரியா் வரதராஜ் நன்றி கூறினாா்.