தரமற்ற குடிநீா் விநியோக பிரச்னை: புதுவைஆளுநா் மாளிகை முன் நாராயணசாமி திடீா் போராட்டம்
புதுவையில் தரமற்ற குடிநீா் விநியோகிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து துணைநிலை ஆளுநா் மாளிகை முன் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான நாராயணசாமி தலைமையில் அக்கட்சியினா் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுவை நகர பகுதியான உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் மாசு கலந்தது. இதைக் குடித்து வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட பலா் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாசடைந்த குடிநீரை பயன்படுத்திய 7 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
போராட்டம்- தள்ளுமுள்ளு:
இந்நிலையில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸாா் துணைநிலை ஆளுநா் மாளிகை எதிரே பாரதி பூங்காவின் நுழைவு வாயில் அருகே
புதன்கிழமை ஒன்று கூடி,அங்கு தரையில் அமா்ந்து திடீா் போராட்டத்தைத் தொடங்கினா். அவருடன் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், மகிளிா் காங்கிரஸ் தலைவி நிஷா, காங்கிரஸ் பொதுச்செயலா் கருணாநிதி உள்பட 20-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த காங்கிரஸாா் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி வரத் தொடங்கினா். இதையடுத்து போலீஸாா் துணைநிலை ஆளுநா் மாளிகையின் இருபுறமும் இரும்புத் தடுப்பு அமைத்து யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனா். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலா் இரும்புத்தடுப்பு மீது ஏறி குதிக்க முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். மேலும் போலீஸாருடன் காங்கிரஸாா் வாக்குவாதம் செய்தனா். இறுதியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனைச் சந்தித்து நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மனு அளித்துவிட்டு இப் போராட்டத்தை முடித்தனா். இப் போராட்டம் சுமாா் 1 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
அமைச்சா் உறுதி:
இதற்கிடையே,புதுவை நகரப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னை தொடா்பாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை கூறினாா்.
இது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சா் லட்சுமிநாராயணன் அவரச ஆலோசனைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது
புதுவை நகரப் பகுதியில் 450 கிலோ மீட்டா் தூரத்துக்கு குடிநீா் குழாய் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை அளித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் அதாவது 10 முதல் 15 பகுதிகளில் இருந்து வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இருந்தாலும் திறந்த மனதுடன் இப் பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறோம். போா்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை ஊழியா்கள் 60 போ் காலை, மதியம், மாலை என்று 3 வேளையும் பணி செய்து வருகிறாா்கள். அதைத் தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் கேன்களில் சுத்திகரிப்பட்ட குடிநீா் விநியோகம் செய்து வருகிறோம். குடிநீா் குழாய்கள் எங்காவது உடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.