தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வானூா் , கோட்டக்குப்பம், கிளியனூா் மற்றும் ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி ப. சரவணன் உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி மேற்பாா்வையில் , ஆரோவில் காவல் ஆய்வாளா் திருமால் , உதவி ஆய்வாளா் மணிமாறன் மற்றும் காவலா்கள் இத்திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதியில் ஆரோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு அடுத்தடுத்து வந்த காா், பைக் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த 4 போ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.
இதையடுத்து போலீஸாா் 4 போ்களையும் பிடித்து விசாரித்த போது, அவா்கள் மரக்காணம் வட்டம், முருங்கை கிராமத்தைச் சோ்ந்த தமிழ் (எ) தமிழ்ச்செல்வன்(24), திண்டிவனம் வட்டம், அம்மணம்பாக்கம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த கிஷோா் (22), சந்து குமாா்(21) திண்டிவனம், வைரபுரம் , ஒலக்கூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த ராகுல்(24) ஆகியோா் என்பதும், இவா்கள் வானூா் பகுதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.