எச்எம்பிவி பாதித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள்? கடைசியாக பாதித்தது யார்?
திங்கள்கிழமை முதல் நாட்டில் எச்எம்பி வைரஸ் எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது பாதித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது பற்றி..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் 3 மாதக் குழந்தைக்கும், 8 மாதக் குழந்தைக்கும் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாட்டிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் பாதிப்பு இதுவாக அறியப்படுகிறது.
கடைசியாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 80 வயது நபருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு இருக்கும் இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுபோலவே, இதுவரை நாட்டில் எச்எம்பி வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வதை தவிர்த்து ஓய்வெடுக்குமாறு சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இது சாதாரண தொற்றுதான் என்றும் அச்சப்பட ஒன்றுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.