"எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏறமாட்டார்!" - மருது அழகுராஜ் 'பளிச்' பேட்டி
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பி.எஸின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. அதைத்தொடர்ந்து, 'பாஜக-வுடன் கூட்டணியிலிருக்கும் நமக்கே இந்த நிலைமையா?' என்கிற குமுறலும் ஓ.பி.எஸ் வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கின்றன.
அமலாக்கத்துறை ஒருபுறம் கிடுக்கிப்பிடி போடும் நிலையில், "கட்சிக்குள் ஓ.பி.எஸை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை" என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இப்படி, ஓபிஎஸ் அணியைச் சுற்றி பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்திருக்கும் நிலையில், அதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும் அவர் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
"உங்கள் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கத்தின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. அதைக் கண்டித்து ஒருவார்த்தைக்கூட ஓபிஎஸ் பேசவில்லை. 'பாஜக-விடம் அடிமையாகிவிட்டார் ஓ.பி.எஸ்' என எழும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?"
"இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. எந்த அரசியல் சார்பும் இல்லாமல், விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதைக் காட்டுவதற்காகக்கூட அமலாக்கத்துறை இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம். 'அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பார்க்கிறது பாஜக' என்கிற விமர்சனம் இதன்மூலமாக அடிப்பட்டுப் போகும். எங்களைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்திப்பார் வைத்திலிங்கம். இதனால் கூட்டணியில் எந்தச் சலசலப்பும் ஏற்படவில்லை.”
"அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஓபிஎஸ். அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் இபிஎஸ். யார் பேச்சு எடுபடும்?"
"அதிமுக ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதில், திமுக-வும் எடப்பாடி பழனிசாமியும்தான் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், கழகம் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புகிறார்கள். ஆக, திமுக-வின் எண்ணத்தைத்தான் எடப்பாடி பிரதிபலிக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், இதுநாள் வரை அமைதியாக இருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் உரிமைக்குரலை எழுப்ப வாய்ப்பிருக்கிறது. அப்போதும்கூட, கழகம் ஒன்றிணைய எடப்பாடி தடைகல்லாக இருந்தால், அவர் இல்லாத அதிமுக உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன."
" 'எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகலாம்' என்கிறீர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வின் ஆறு சீனியர் தலைவர்கள் எடப்பாடியைச் சந்தித்து, கழகம் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதைப் பார்த்தோம். அதன்பின்னரும், அவருக்கு எதிராக கிளர்ச்சியோ, போர்க்குரலோ எழும்பவில்லையே. அந்த ஆறு சீனியர்களும்கூட அமைதியாகத்தானே இருக்கிறார்கள். 'கட்சி எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது' என்பதாகத்தானே இதைப் புரிந்துகொள்ள முடியும்?"
``முதலில் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே, எடப்பாடிக்கு எதிரான முடிவைக் கட்சித் தொண்டர்கள் எடுத்துவிட்டனர். அதனால்தான், கட்சி வாக்குகள்கூட அவர் தலைமையிலான அதிமுக-வுக்கு விழவில்லை. ஏழு தொகுதிகளில் கட்சி டெபாஸிட்டைப் பறிகொடுத்திருக்கிறது. வேறோரு சின்னத்தை ஏறெடுத்தும் பார்க்காத இரட்டை இலையின் பக்தர்கள்கூட, வேறு சின்னத்திற்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'என்னிடம் எந்த ஆறு சீனியரும் வந்து பேசவில்லை' என எடப்பாடி விளக்கம் சொல்கிறாரே தவிர, சம்பந்தப்பட்ட ஆறு பேரில் ஒருவர்கூட, 'நாங்கள் அவரைச் சந்திக்கவில்லை' எனச் சொல்லவில்லை. எடப்பாடியின் கருத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு துளியும் உடன்பாடில்லை.
விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி. அவருடைய ஓட்டைப் படகில் விஜய் ஏறமாட்டார். அதிமுக வாக்குகளைத் தன் வசப்படுத்த தனித்துப் போட்டியிடத்தான் விஜய்யும் விரும்புவார். விரைவிலேயே, அதிமுக-வுக்குள் ஒரு எரிமலை வெடிக்கத்தான் போகிறது. பாஜக-வுடன் அணிசேர்ந்தால் மட்டுமே அதிமுக கரைசேர முடியும்.”
"மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'மோடியா.. லேடியா...' என வசனம் எழுதிக் கொடுத்தவர் நீங்கள். நீங்களே, 'பாஜக-வுடன் அணிசேர்ந்தால் தான் அதிமுக கரைசேர முடியும்' என்பது முரண்பாடாக இல்லையா?"
``அந்த நிலைமைக்குக் கட்சியைத் தள்ளிவிட்டுவிட்டார் எடப்பாடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-வை பின்னுக்குத்தள்ளி 13 இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. திமுக எதிர்ப்பு வாக்குகளை பெருவாரியாக தன் வசப்படுத்தி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதிமுக-வின் வாக்கு வங்கி பாஜக பக்கம் போய்விட்டன. இந்தச் சூழலில், பாஜக-வுடன் அணிசேர்ந்தால் மட்டுமே அதிமுக மீண்டெழ முடியும். அம்மாவின் காலத்தில் இருந்த கட்சியின் நிலை வேறு, இப்போதிருக்கும் நிலை வேறு. ”
"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நீங்களும் புறக்கணித்திருக்கிறீர்கள். 'தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தாதது, திமுக-வின் வெற்றிக்குத்தான் வாய்ப்பளிக்கும்' என்கிற விமர்சனத்திற்கு உங்கள் பதில்?"
"இந்த இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. திமுக செய்யும் தேர்தல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்கூட, திமுக-வின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்த விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டது எனக்கு வருத்தம்தான்.”
"பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருகிறாரே சீமான். அதைப் எப்படி பார்க்கிறீர்கள்?"
"பெரியார் திடலில் இருந்துதான் அவருடைய அரசியல் தொடங்கியது. கடந்தாண்டு வரையிலும்கூட பெரியாருக்கு வீர வணக்கம் செலுத்தியவர், தற்போது அவதூறு பேசுகிறார். 'பெரியார் பற்றி தற்போதுதான் புரிந்துகொண்டேன்' என அவர் சொல்வது நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. திராவிட அரசியலையே ஒழிப்பேன் என்கிறார் சீமான். அந்த திராவிட அரசியலில் இருந்துதான் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸும் வளர்ந்திருக்கிறார்கள். அவர்களும்கூட சீமானின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது உள்ளபடியே எனக்கு வருத்தத்தையே தருகிறது. பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை."
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs