SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் மாநாடு கருத்தரங்குகள். கலாச்சார நிகழ்வ...
‘எந்த மாணவருக்கும் இதுவரை நான் ஜீரோ மார்க் போட்டதே இல்லை’ - நல்லாசிரியர் கவிதா!
ரஷ்யா வரை...
சென்னையின் பரபரப்பான புழல் காந்தி சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் ரஷ்யா வரை சென்று படித்திருக்கின்றனர் என்பதை கேள்விப்பட்டு அதற்கு காரணமான அப்பள்ளியின் கணித ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற கவிதாவை நேரில் சந்தித்து உரையாடத் தொடங்கினோம்.

“ கடந்த 19 வருடங்களாக இந்தப்பள்ளியில் தான் பணியாற்றி வர்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கல் நாட்டிய பள்ளி இது. நான் முதன்முதலாக பணியில் சேரும்போது இந்தப்பகுதி முழுவதுமே கிராமப்புறங்களாகத்தான் இருந்தது. 300ற்கும் குறைவான மாணவர்களே படிச்சிட்டு இருந்தாங்க.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான தேவை
நிறைய மக்கள் கிட்ட படிப்போட முக்கியத்துவத்தையும் அத்தியாவசியத்தையும் உணர்த்தி அரசோட நலத்திட்டங்களை வீடு வீடாக போய் தெரியப்படுத்துவோம். மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான தேவைகளை தொண்டு நிறுவனங்களை அணுகி பூர்த்தி செய்து கொடுப்போம். அதோட பலனா இன்னைக்கு 1300 மாணவர்கள் படிக்கிறாங்க. அவங்களுக்கான சரியான வகுப்பறை வசதி இல்லாததனால இப்போ மூன்று மாடிக்கட்டிடமாக உருவாகிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே திறப்பு விழா நடக்கப்போகுது எங்க மாணவர்களும் சீமை ஓட்டு கட்டிடத்துல இருந்து மாடிக்கட்டிடத்துல படிக்கப்போறாங்க." மனம் பொங்க குதுகலிக்கிறார் ஆசிரியர் கவிதா!

ஜீரோ மார்க் போட்டதே இல்லை
“மாணவர்களுக்கு கணிதம்ங்கிறது ரொம்ப முக்கியமான ஒண்ணு. பி.இ.டி பிரியர்டை கடன் வாங்கி கணக்குப்பாடத்தை என்னைக்கும் மாணவர்கள்கிட்ட திணிக்க மாட்டேன். என்னோட பாடத்தை செயல்முறையில தான் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பேன். என்னோட 19 வருட ஆசிரிய வாழ்வுல எந்த மாணவருக்கும் இதுவரை நான் ஜீரோ மார்க் போட்டதே இல்லை. ஒரு மாணவன் கணக்கு போடுறதுக்கு முயற்சி பண்ணிருக்கிறானாலே அவனை பாராட்டி அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு போகத்தான் முயற்சி செய்யனும்.
கொரோனா காலகட்டம்
மாணவர்களை என்றைக்கும் தளர விடவே கூடாது. அதைப்போல என்னோட மாணவர்கள் எல்லாரும் கண்டிப்பா வகுப்புல ஆங்கிலம் தான் பேசணும். இன்றைய காலக்கட்டத்துல ஆங்கிலம் அத்தியாவசியமான மொழியா இருக்கு. அதை மாணவர்கள் கற்றுக்கொள்ளவது அவசியமான ஒண்ணு. கணக்கு ஆசிரியர் கணக்கு மட்டும் தான் சொல்லிக் கொடுக்கனும்ன்னு எந்த நிர்பந்தமும் இல்லல. நானும் அந்த பகுதியிலே வசிக்கிறதுனால கொரோனா பேரிடர் காலத்துல மாணவர்கள் என்னோட வீட்டுக்கு வந்து நிறைய ஆன்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவாங்க.

ரஷ்யா வரை சென்ற மாணவர்கள்
2021 கொரோனா காலத்துல டாக்டர்.அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் முன்னெடுத்த ‘மாணவர்கள் தயாரிக்கும் 100 செயற்கோள்’ திட்டத்துல இணைந்து பயிற்சி பெற்று எங்க பள்ளி மாணவர்கள் 1 செயற்கோளையே செய்து முடிச்சாங்க. மேலும் 11 மாணவர்கள், ‘அகஸ்தியர் ஏவுகணை அறிவியல் திட்டம்ன்னு’ ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்த திட்டத்துல பங்கெடுத்து அதில் 3 மாணவர்கள் பல்வேறு கட்ட பயிற்சிகள், தேர்வுகள் எல்லவற்றையும் முடித்து இரஷ்யாவில் உள்ள விண்வெளி மையங்களை பார்வையிட தேர்வு செய்யப்பட்டாங்க. என் மாணவர்கள் என்னை ரஷ்யா வரை அழைத்து சென்று பெருமைப்படுத்துனாங்கன்னு தான் சொல்லனும் என் மாணவர்களால நானும் இந்த ஏவுகணை அறிவியலை கற்று கொண்டேன்.
மேலும் எழுதுக என்னும் புத்தகம் எழுதுகிற இயக்கத்தோட அறிமுகம் கிடைத்தது.என்னுடைய மாணவர்களை அதில் இணைத்துவிட்டேன். இப்போது என்னுடைய 4 மாணவர்கள் 8 புத்தகங்களை எழுதி நம்முடைய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களால் அந்தப்புத்தகம் வெளியிடப்பட்டது. என பெருமைப்பொங்க பேசி முடித்தவர்

மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்,
“ எங்க பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி அதில் 8 ஆம் வகுப்பு வரை தான் இருக்கு. 8 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வேறு பள்ளிக்கோ , கல்லூரிக்கோ போனாலும் இன்றுவரையில் மாணவர்கள் தொடர்பில் இருக்காங்க, அப்படி என்னுடைய முன்னாள் மாணவி ஒருவர் நம்ம விகடன் குழுமத்தில் 2025 இன் மாணவ பத்திரிகையாளர் திட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்டதுல எனக்கு அதீத மகிழ்ச்சி. இன்றைக்கும் என்னோட மாணவர்கள் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பல இடங்களுக்கு பயணப்படுறாங்க. இது அவங்களுக்கு கல்விங்கிற ஆயுதம் கொடுத்த நம்பிக்கை அது இனி அவர்களை வழிநடத்துங்கிற நம்பிக்கை இருக்கு.” என்றவர் சீக்கிரமே வேறொரு பள்ளிக்கு மாறுதல் பெறுவதாக ஒரு ஷாக்கைக் கொடுத்தார்.

மாணவர்களோட வளர்ச்சியில தான் ஆசிரியரோட வெற்றி
“ நான் பணியாற்றும் புழல் பள்ளி இப்போ சிறப்பான நிலைக்கு வந்திருக்கு. மாணவர் சேர்க்கையும், அவர்களோட வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கு. அதனால் 30 மாணவர்களே படிக்கும் சென்னை மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் பெறுகிறேன். என்னைக்கும் மாணவர்களோட வளர்ச்சியில தான் ஆசிரியரோட வெற்றியே இருக்கு என நெகிழ்ந்த ஆசிரியை கவிதாவிற்கு ஒரு ராயல் சல்யூட்!
