வடக்குத் தெற்கு பஞ்சாயத்து.. தொடர்ந்து புதைக்கப்படும் ஆதிச்சநல்லூர்! - முத்தாலங்...
என் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் இது - வாசிப்பை நேசிக்க வைத்த வேள்பாரி | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வீரயுக நாயகன் வேள்பாரி எவ்வளவு பிடிக்கும் என கேட்டால் எப்படி அளப்பேன் நான். அலுவலக நாட்களில் விடுமுறை எடுத்து படித்த கதை சொல்லவா, இரவு முழுவதும் கண்விழித்து விடிந்தது கூட தெரியாமல் புத்தகத்தில் மூழ்கித் திளைத்த கதை சொல்லவா, அலுவலக பயண நேரத்தில், இரவு வீடு திரும்புகையில், கைபேசியின் ஒளியில் படித்ததைச் சொல்லவா, எதை சொல்வேன் நான்.
வேள்பாரியைப் பற்றி கூற வேண்டுமென்றால், எங்கு தொடங்கி எங்கு முடிக்க, யாரில் தொடங்கி யாருடன் முடிக்க, அப்படி ஒரு காவியம் அது. அதனால் வேள்பாரியின் உலகத்தில் பயணித்து, மூழ்கித் திளைத்த இரசிகன், எண்ணில் இருந்தே தொடங்குகிறேன்.

கல்லூரி நாட்களிலும் சரி, வேலைசெய்யும் இடத்திலும் சரி, நண்பர்கள் தாங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி பேசி சிலாகித்துக்கொண்ட நேரங்களில் கூட, புத்தக வாசிப்பின் மீது ஆவல் வந்ததில்லை.
ஒருநாள், கைபேசியில் விகடன் வெளியிட்ட வேள்பாரியின் கதைச் சுருக்கம் கொண்ட காணொளியைக் கண்டேன். வேள்பாரியின் கதையை அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருப்பார்கள்.
அதிலும் அந்தக் காணொளி முடிவில், "மூவேந்தரின் கூட்டுப் படையை சின்னஞ்சிறு பறம்பின் படை வெல்லுமா, பாரி வெல்வானா, வீழ்வானா" என பெரும் எதிர்ப்பார்ப்புடன் முடியும் அந்த காந்தக் குரல். அந்த எதிர்பார்ப்பு என் மனதை ஏதோ செய்தது, அந்த முடிவை தெரிந்துகொள்ள மனம் அலைந்து திரிந்தது.
அப்பொழுது தான் வேள்பாரி புத்தகவடிவில் விகடன் பதிப்பகம் வெளியிட்டதை தெரிந்துகொண்டேன். கடைகள் பல ஏறியும் கிடைக்காத காரணத்தால், இணையத்தில் வாங்க பணம் செலுத்தி, பாரியின் வருகைக்கு காத்திருந்த நாட்களின் தவிப்பை என்னவென்று சொல்வது.
கையில் புத்தகத்தை வாங்கி பிரித்துப் பார்த்த அந்த நொடி, நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. காத்திருந்து கிடைக்கும் பொருள் கொடுக்கும் மகிழ்ச்சியை வேறு எது கொடுக்க முடியும். காத்திருத்தலின் சுவை காதலில் மட்டுமல்ல, பிடித்த புத்தகத்திற்கும் உண்டென்பதை உணர்ந்த நாள் அன்று.
படிக்க ஆரம்பித்த பிறகு, நெருங்கியவர்களிடமும் நண்பர்களிடமும், பாரியைப் பற்றி பேசி மகிழாத நாட்களே இல்லை. நான் படித்த முதல் புத்தகம் என்பதாலா, இல்லை சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்கள் செய்த மாயமா, மனியம் செல்வம் அவர்களின் ஓவியங்கள் கொடுத்த மயக்கமா, பாரியா, இல்லை பாரியுடன் வரும் மற்ற கதாபாத்திரங்களா, இல்லை இயற்கை எழில் கொஞ்சும் பறம்பு நாடா, எது என் மனதிற்கு நெருக்கமானது என பிரித்து அறிய முடியவில்லை.
ஆனால் ஒன்று, வேள்பாரி ஏற்படுத்திய புத்தக வாசிப்பின் மோகத்தில், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தேன், இன்னும் படித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் வேள்பாரி மட்டும் தான் மனதிற்க்கு நெருக்கமான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அந்த நெருக்கத்தை, நான் வேறெந்த புத்தகத்திலும் அனுபவித்ததில்லை. இப்பொழுதெல்லாம் நெருக்கமானவர்களுக்கு பரிசளிப்பதென்றால், முதலில் நினைவிற்கு வருவது வேள்பாரி தான்.

மனதிற்கு பிடித்த கதாபாத்திரம்:
மனதிற்கு பிடித்த கதாபாத்திரம் என்றால், யாரைப் பற்றிக் கூறுவது. ஒவ்வொன்றும் முத்துக்கள் ஆயிற்றே. பாரியையும், கபிலரையும் தாண்டி எனக்குப் பிடித்த மற்றுமொரு 3 கதாபாத்திரங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.
பொற்சுவை: அரசனுக்கு நிகரான செல்வம் படைத்த பெறுவணிகனின் மகள். பார் முழுவதும் கண்டிராத பேரழகி, அந்த அழகையும் விஞ்சும் பேரறிவு படைத்தவள் பொற்சுவை. பெரும்புலவர் கபிலரிடம் கல்வி கற்றவள். எத்தனை பெரிய செல்வங்கள் கொண்டிருந்தாலும், அவை அனைத்தையும் காலுக்கடியில் புதைத்துவிடும் அவளின் வேதனையும் மனவலியும்.
"பொன்னொளியில் திரளும் கண்ணீர் எவர்க் கண்ணிலும் படுவதில்லை" எனும் அவளின் கூற்று அந்த மனவலியின் வெளிப்பாடு தான். அவளின் மனவேதனையைப் போக்க ஒற்றைச் சொல்லின்றி தவிப்பது அவளின் தோழி சுகமதி மட்டும் அல்ல, நாமும் தான். வைகை ஆற்றங்கரையில் அவளின் உரையாடல்களில் உள்ள வலியை நம்முள் கடத்தும்பொழுது, வைகை நம் கண்களில் பாய்கிறது. "என் உடல் இக்கனியாகவும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி. அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை" எனும் அவளின் வாக்கியத்தின் ஆழத்தை அறியும்பொழுது, உறைந்துவிடும் நம் மனம். வணிகம் ஒன்றே வாழ்க்கை, பொருட்களுக்கு மட்டுமே மதிப்பு என வாழும் குள்ளநரிக் கூட்டத்தின் நடுவே, துள்ளி வரும் ஒற்றை மான்குட்டியாய் தெரிகிறாள் பொற்சுவை.

நீலன்: பறம்பின் மாவீரன், அழகு மயிலாவின் ஆசைக் காதலன். கபிலருக்கு துணையாய் நின்று கருணையே உருவான பாரியிடம் சேர்த்தவன். அவனின் மாவீரம், அவனை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிலைபெற்று நிற்கும். பாண்டியர்களின் பெரும்படை, ஆறடிக்கு மேல் வளர்ந்து மாமிசமலை போல் இருக்கும் யவன வீரர்கள், காற்று கூட நுழைய தடையாய் நிற்கும் கோட்டைக் காவல், இவை அனைத்தையும் தாண்டி, உடன் வந்த 3 பறம்பு வீரர்கள் மற்றும், அடிமைகளாய் சிறைவைக்கப்பட்ட திரையர்களின் துணைக் கொண்டு, இளமருதனின் தலை சீவி, பறம்பின் பொக்கிஷமான தேவ வாக்கு விலங்கினை மீட்ட, ஈடு இணையற்ற மாவீரனான நீலனை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா.?
இரவாதான்: பறம்பின் ஈடு இணையற்ற குதிரை வீரன். அவன் வாளெடுத்து வீசினால், வானம் தான் எல்லை. மூவேந்தர்களுடன் நடந்த போரில் அவர்களின் படையை முன்னேற விடாமல் தடுத்துத் தவிடுபொடியாக்கிய கேடயம் அவன். ஒரு சிறந்த போர் வீரனுக்கான முதன்மையான பண்பு நாளொழுக்கமும், போரின் நெறிகளை கடைபிடிப்பதுவும் தான் என்பதை உலகிற்கு உணர்த்தியவன். தகர்க்கவே முடியாத அளவிற்கு மூவேந்தரின் பாதுகாப்பு வீரர்கள் கொண்டு அமைக்கப் பட்ட மூஞ்சல். அந்த மூஞ்சலில் அடைக்கப் பட்டிருந்தான் நீலன்.
மாபெரும் வீரத்தினை வெளிப்படுத்தி மூவேந்தரின் நூற்றுக்கணக்கான வீரர்களை தனி ஒருவனாய், கொன்று குவித்து நீலனை மீட்டெடுத்தத் தருணத்தில், போரின் முடிவை அறிவிக்கும் முரசின் ஒளி கேட்டுப், போரின் அறத்தையும் விதிகளையும் மதித்து, மீட்டெடுத்த நீலனை திருப்பியனுப்பி, ஏக்கத்துடன் பார்த்த பறம்பின் இணையில்லா குதிரை வீரனும் குதிரைப் படையின் தளபதியுமான இராவதனின் வீரத்தையும், வீரனுக்கே உரித்தான நல்லொழுக்கத்தையும் கண்டு வியாகாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா.?
வள்ளி, எவ்விக்கு சோமபூண்டைக் கொடுத்தாள். ஊரே மயக்கத்தில் மூழ்கியது. வெங்கடேசன் வேள்பாரியை கொடுத்தார், தமிழ் உலகே அவரின் எழுத்தில் மயங்கி மூழ்கியது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!