லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!
கேரளத்தில் ஐடி ஊழியரைக் கடத்தி தாக்கிய விவகாரத்தில், செப்., 17 ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் கடந்த 24 ஆம் தேதி லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும் மற்றொரு ஐடி ஊழியர்கள் அடங்கிய குழுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தகராறில் ஈடுபட்ட குழுவில் உள்ள ஐடி ஊழியர் ஒருவரை மதுபானத்திற்கு வெளியே காத்திருந்து காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடத்திலின்போது நடிகை லட்சுமி மேனனும் நண்பர்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின்பேரில், லட்சுமி மேனன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. லட்சுமி மேனனின் நண்பர்க்ளான மிதுன், அனீஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது.
நண்பர்கள் கைதானதைத் தொடர்ந்து லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார். ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த எர்ணாகுளம் காவல் துறையினர் முடிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையில், செப்., 17 ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!